ஜகபர் அலி கொலை வழக்கு – 3 பேர் மீது பாய்ந்த குண்டாஸ்!

ஜகபர் அலி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரில் மூவர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே வெங்களூரைச் சோ்ந்த கரீம் ராவுத்தா் மகன் ஜகபா் அலி (58). முன்னாள் அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினரான இவா், கனிம வள கொள்ளை நடப்பதாக அதிகாரிகளிடம் பலமுறை புகாா் அளித்து வந்ததாக தெரிகிறது. இந்த சூழலில், கடந்த ஜன.17ஆம் தேதி ஜகபர் அலி, பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற டிப்பர் லாரி மோதியதில் ஜகபர் அலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து திருமயம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கனிமவள கொள்ளையில் சம்பந்தப்பட்ட சிலர் ஜகபர் அலியை திட்டமிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, விபத்து வழக்கை, கொலை வழக்காக மாற்றிய திருமயம் போலீசார் கல்குவாரி உரிமையாளர் உட்பட 5 பேரை கைது செய்து புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கில் கைதானவர்கள் தரப்பில் இரண்டு முறை நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்கில் சிறையில் உள்ள 5 பேரில் 3 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் ஆட்சியர் அருணாவிற்கு பரிந்துரை செய்தனர்.

ஆட்சியர் அருணா குவாரி உரிமையாளர்கள் ராசு, ராமையா மற்றும் லாரி உரிமையாளர் முருகானந்தம் ஆகியோரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி, 3 பேர் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது. ஐந்து பேரும் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் இருந்த நிலையில் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.