2024 ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கு ஜெகன் தயாராகி வருகிறார். இதற்காக எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து சட்டசபை தேர்தல் தொடர்பாக டார்கெட் நிர்ணயித்துள்ளார்.
ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. பல்வேறு அதிரடிகளுக்கு பெயர் பெற்ற ஜெகன் மோகன், சமீபத்தில் தனது அமைச்சரவையை முழுவதுமாக மாற்றி அமைத்தார். ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டுகளே ஆகியுள்ள நிலையில், அடுத்து நடக்க உள்ள 2024 ஆந்திரா சட்டசபை தேர்தலுக்கு ஜெகன் தயாராகி வருகிறார். இதற்காக எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து சட்டசபை தேர்தல் தொடர்பாக டார்கெட் நிர்ணயித்துள்ளார்.
புதன்கிழமை நடந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாககிகள் கூட்டத்தில் பேசிய ஜெகன், ” நம் ஆட்சி, எம்.எல்.ஏக்கள் செயல்பாடு குறித்து ஒரு ரகசிய சர்வே எடுத்தோம். அவற்றில் 45% தொகுதிகளில் நெகட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது. மொத்தத்தில் 65% மக்களே அரசாங்கம் மற்றும் முதல்வர் செயல்பாட்டில் திருப்தியடைந்துள்ளனர். எனவே, அனைவரும் வருகின்ற மே 10ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து பேச வேண்டும். மாற்றிக் கொள்ளாமல், இதே பாணியில் செயல்பட்டால் 2024 தேர்தலில் உங்களுக்கு பதிலாக மாற்று வேட்பாளர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவும் தயங்க மாட்டேன்.” என்று எச்சரித்துள்ளார்.
மேலும், “அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், கட்சி மண்டல, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு களத்தில் கடுமையான உழைப்பைப் போட்டு, 2024 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பதை உறுதி செய்ய வேண்டும்.” என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
முக்கியமாக சட்டசபை தேர்தலில் 160 முதல் 175 தொகுதிகள் வரை கைப்பற்றி பிரமாண்டமாக வெற்றி பெற வேண்டும் என்றும் டார்கெட் வைத்துள்ளனர். மக்களை நேரடியாக சந்தித்து குறைகளை கேட்கும் ஜெகன், தேர்தலையொட்டி அவரது செயல்பாடுகளிலும் சில மாற்றங்களை கொண்டு வரப்போகிறாராம். அதன்படி, மாவட்டங்கள் வாரியாக சென்று மக்களை சந்தித்துப் பேசி நம்பிக்கையை இன்னும் அதிகரிக்க திட்டுமிட்டுள்ளார்.
சர்வே ரிசல்ட்டை அனைவரது முன்னிலையில் வெளியிட்டு பேசியதில் பல எம்.எல்.ஏக்கள் ஷாக் ஆகியுள்ளனர். “உங்களது விருப்பு வெறுப்பு, மாற்றுக் கருத்துகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தலில் நாம் எதிர்பார்த்த வெற்றியை பெற இப்போதிருந்தே அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுங்கள்.” என்றும் ஜெகன் சொல்லியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் குறித்து விரிவாக பேசியிருப்பதால், பலரும் முன்கூட்டியே தேர்தல் வருகிறதா என்று குழம்பியுள்ளனர். ஆனால், “தேர்தலை முன்கூட்டியே நடத்தும் திட்டம் எல்லாம் இல்லை. தேர்தல் திட்டமிட்ட படிதான் நடக்கும். அதற்கு இப்போதிருந்தே தயாராவது அவசியம்” என்று ஜெகன் கூறியுள்ளார்.








