மதுரையில் புரோட்டா எப்படி செய்வது, புரோட்டா மாஸ்டர் ஆவது எப்படி என்பதை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி பள்ளி இயங்கி வருகிறது.
தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியாவிலும் படித்த இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆனால் அவர்களுக்கு வேலைவாய்ப்புகள் தான் இல்லை. அவ்வாறு தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்தாலும் அவர்களின் மாத வருமானம் மிகக் குறைவாகவே உள்ளது. இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.
நம்மூரில் படித்த இளைஞர்களுக்கு பத்தாயிரம், பதினைந்து ஆயிரம்தான் சம்பளம். ஆனால் புரோட்டா மாஸ்டருக்கோ மாதம் முப்பதாயிரம் சம்பளம் என பல இடங்களில் விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன. இதுபோன்ற மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாவது உண்டு. இந்நிலையில் புரோட்டா செய்வது எப்படி என்பதை கற்றுக்கொடுக்க பள்ளியும் இயங்கி வருவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை தபால் தந்தி நகர் ரோடு, நான்காவது குறுக்கு தெருவில் இயங்கி வருகிறது இந்த புரோட்டா பள்ளி நம்பர் ஒன். இந்த பள்ளியில் புரோட்டா எப்படி செய்வது என சொல்லி தருகிறார்களாம். மேலும் புரோட்டா மாஸ்டர் வேலையும் வாங்கி தருகிறார்களாம். பத்து நாட்கள் பயிற்சி வழங்கப்படும். இதற்கு கட்டணம் ரூ.4,000 எனவும், ஆண், பெண் என இருபாலருக்கும் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்துள்ளனர். மேலும் அங்கு வெளியூரை சேர்ந்தவர்களுக்கு விடுதி வசதியும் உள்ளதாம். பல தேர்வுகளுக்கு பயிற்சி மையங்கள் இருந்து வரும் நிலையில், பரோட்டாவுக்கு பயிற்சி மையம் இருப்பது மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.







