மீனவர்கள் சுட்டுக்கொலை: ரூ. 10 கோடி இழப்பீட்டுத் தொகையை பகிர்ந்து வழங்க உத்தரவு!

தமிழ்நாடு மீனவர் உள்ளிட்ட இருவரை இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற வழக்கில், வழங்கப்பட்ட 10 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கேரள கடல் பகுதியில் கடந்த 2012…

தமிழ்நாடு மீனவர் உள்ளிட்ட இருவரை இத்தாலிய கடற்படை வீரர்கள் சுட்டுக்கொன்ற வழக்கில், வழங்கப்பட்ட 10 கோடி ரூபாய் இழப்பீட்டுத் தொகையை, மீனவர்களின் குடும்பத்தினருக்கு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரள கடல் பகுதியில் கடந்த 2012 ஆம் ஆண்டு மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு மீனவர் அஜஸ்பிங்க், கேரள மீனவர் ஜெலஸ்டின் ஆகியோரை, அவ்வழியாக வந்த தனியார் நிறுவன சரக்கு கப்பலின் இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட உச்சநீதிமன்றம், இத்தாலிய கடற்படையினரால் கொல்லப்பட்ட இரண்டு இந்திய மீனவர்களுக்கு இத்தாலி அரசு வழங்கிய 10 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை நீதிமன்றத்தில் செலுத்துமாறு மத்திய அரசுக்கு கடந்த 9-ம் தேதி உத்தரவிட்டது.

அதன்படி இத்தாலி நாடு வழங்கிய 10 கோடி ரூபாயினை மத்திய அரசு வழங்கிய நிலையில் அந்தத் தொகையானது உச்சநீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்டது. இந்திய மீனவர்களுக்கு இத்தாலி அரசு வழங்கிய 10 கோடி ரூபாய் இழப்பீடு திருப்தி அளிக்கிறது எனக் கூறிய நீதிபதிகள்,

10 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகையை கேரள உயர்நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்துக்கு மாற்ற உத்தரவிட்டனர். உயிரிழந்த இரு மீனவர்களின் குடும்பத்துக்கு தலா 4 கோடி ரூபாயும், மீதமுள்ள 2 கோடி ரூபாயை காயமடைந்த படகு உரிமையாளருக்கு வழங்கவும் உத்தரவிட்டனர். இதனையடுத்து இத்தாலிய பாதுகாப்பு படை வீரர்கள் மாசிமிலியானே லாத்தோரே, சால்வத்தோரே கிரோனே ஆகியோருக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றம் முடித்து வைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.