அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா- முன்னாள் அமைச்சர் தங்கமணி

திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்ற போது அறிவாலயத்தை முற்றுகையிட சென்ற போது அவர்களுக்கு அனுமதியளிக்காமல் அன்றைக்கு அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.  நாமக்கல் பூங்கா சாலையில்…

திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்ற போது அறிவாலயத்தை முற்றுகையிட சென்ற போது அவர்களுக்கு அனுமதியளிக்காமல் அன்றைக்கு அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

நாமக்கல் பூங்கா சாலையில் அதிமுக சார்பில் மின்கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் மின்சாரத்துறை அமைச்சரும், குமாரபாளையம் சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, அதிமுக இயக்கத்தில் எத்தனையோ போட்டிகள் நடந்தன.

அதிமுக தலைமை அலுவலகம் என்று சொன்னால்  எந்த காலத்திலும் மதிப்பும், மரியாதையும் இருந்தது. முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அவருடைய மனைவி ஜானகி எழுதி கொடுத்த கட்டிடம் அது. அதன்பிறகு அந்த அலுவலகத்தில் தெய்வமாக ஜெயலலிதா இருந்தார்கள். ஜெயலலிதா அவர்களை சந்திக்க செல்ல வேண்டும் என்றால் செருப்பை கழற்றி விட்டு உள்ளே செல்லோம். கோவில் போன்ற இடமாக நினைக்கின்றோம்.

ஜெயலலிதா இருந்த அறையை தொட்டு கும்பிட்ட காலம் போய் திமுகவினரின் துணையோடு கதவை எட்டி உதைத்து, கடப்பாரை கொண்டு உடைத்து ஒபிஎஸ் உள்ளே சென்றார். திமுக தலைவர் ஸ்டாலின் உதவியில்லாமல் உள்ளே செல்ல முடியுமா ? காவல்துறை ஒத்துக்கொள்ளுமா அனைவரும் சிந்தித்து பார்க்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், திமுகவில் இருந்து வைகோ பிரிந்து சென்ற போது ஜெயலலிதா அவர்கள் திமுகவில் போட்டி என்றால் ஆதரவு தரமாட்டேன் என்றார்கள். மெயின்ரோடு வழியாக சென்றால் திமுக அலுவலகமான அறிவாலயத்திற்குள் சென்று விடுவார்கள் என வைகோவிற்கு அனுமதி அளிக்க மறத்து அன்றைய தினம் அறிவாலயத்தை காப்பாற்றி கொடுத்தவர் ஜெயலலிதா.

தொடர்ந்து பேசிய அவர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் இருந்த இடத்தை காலால் எட்டி உதைத்து உள்ளே செல்கிறார்கள் என்றால் இதுதான் ஜெயலலிதாவுக்கும், ஸ்டாலினுக்கும் உள்ள வித்தியாசம். மக்களை பார்க்கின்றவர், ஜனநாயத்தின் படி ஆட்சி நடத்துகின்றவர்கள் யார் என மக்களுக்கு தெரியும் என்றார்.

பன்னீர் செல்வத்தை அதிமுக அலுவலகத்திற்கு அனுப்பி அங்கு இருக்கின்ற அனைத்து பொருட்களையும் உடைத்து, ஆவணங்களை எடுத்து செல்லும் வரை காவலர்கள் காத்து இருக்கின்றனர். அதிமுக அலுவலகம் பாதுகாக்கப்பட வேண்டும் என ஒரு வாரம் முன்பாகவே காவல்துறையிடம் கடிதம் அனுப்பியிருந்தோம். அதிமுக அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்காமல் ஓபிஎஸ் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றனர்.

இதற்கெல்லாம் விரைவில் வரக்கூடிய 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் மக்களின் தண்டனைக்கு ஆளாகுவீர்கள். அதிமுக அலுவலகத்தை எட்டி உதைத்தவர்களுக்கு ஜெயலலிதாவின் ஆன்மா 24 மணி நேரத்தில் தண்டனை பெற்றுக் கொடுத்துள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஜெயலலிதாவின் ஆன்மா வேலை செய்து 40 தொகுதியும்
அதிமுக கைப்பற்றும் அதுதான் உங்களுக்கு தண்டனை. கோவிலாக இருந்த அதிமுக அலுவலகத்தை செருப்பு காலில் எட்டி உதைக்க அனுமதி அளித்துள்ளீர்கள். அதற்கெல்லாம் விரைவில் தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.