2021-2022ஆம் கல்வியாண்டில் பிளஸ் 1 பயின்ற மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். இந்த மிதிவண்டிகளில் முதலமைச்சர் படம் பொறிக்கப்படாமல், சுற்றுசூழல் விழிப்புணர்வு குறித்த வாசகங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும்
விலையில்லா இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டதால், இலவச சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்
நலத்துறை சார்பில் மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
2021-2022ஆம் கல்வியாண்டில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் பகுதியாக அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11-ஆம் வகுப்பு பயின்ற 6,35,947 மாணவ- மாணவிகளுக்கு ரூ.323, 03, 61,042 செலவில் மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதன் அடையாளமாக 10 பேருக்கு மிதிவண்டிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தொடர்ந்து முதலமைச்சர் மாணவ, மாணவிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கடந்த அதிமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உருவப்படம் பொருத்திய
சைக்கிள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த ஆண்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் படம் மானவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிளில் பொருத்தப்படவில்லை. அதற்கு மாறாக தமிழக அரசின் முத்திரை மற்றும்
சைக்கிள் பயன்படுத்தினால் ஏற்படும் நன்மைகளான, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இதய
பாதுகாப்பு, ஆரோக்கியமான வாழ்வு, புவி வெப்பமடைதலை தடுத்தல், ஆற்றல்
சேமித்தல், கலோரிகள் சிதைந்து ஆற்றல் அளித்தல் உள்ளிட்டவை தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தன. அரசு சார்ந்த பல்வேறு விஷயங்களில் தனது உருவப்படம் இடம் பெறுவதை தவிர்த்து தனது எளிமையான அணுகுமுறையை வெளிப்படுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தற்போது இலவச சைக்கிள் விஷயத்திலும் அதனை தொடர்ந்துள்ளதாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இலவச சைக்கிள் பெற்றது குறித்து மாணவ, மாணவிகள் கூறுகையில், தொலை தூரத்தில் இருந்து பள்ளிக்கு வருபவர்கள் அதிக அளவு புத்தகங்களை சுமந்து வரும் சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ள இலவச சைக்கிள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறினர்.







