’பாட்ஷாவின் வெற்றியை பாட்ஷா 2 கொடுக்குமா என்பது ரஜினிக்கே கேள்வியாக இருந்தது’

பாட்ஷாவின் வெற்றியை பாட்ஷா 2 கொடுக்குமா, ஒர்க் அவுட் ஆகுமா என்பது ரஜினிக்கே கேள்வியாக இருந்தது. அதனால் தான் பாட்ஷா 2 எடுக்கவில்லை என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில்…

பாட்ஷாவின் வெற்றியை பாட்ஷா 2 கொடுக்குமா, ஒர்க் அவுட் ஆகுமா என்பது ரஜினிக்கே கேள்வியாக இருந்தது. அதனால் தான் பாட்ஷா 2 எடுக்கவில்லை என இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், குஷ்பு நடித்த அண்ணாமலை படம் 1992-ஆம் ஆண்டு வெளியானது. தற்போது படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவுபெற்றுள்ளது. அதனைக்கொண்டாடும் விதமாக அவரது அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இந்நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், இன்று மகிழ்ச்சியான நாள். 1992-ல் வெளியான படம் அண்ணாமலை. 30 ஆண்டுகளாகியும் மக்கள் இந்த படத்தை மறக்கவில்லை. பாடல்கள் ஹிட்டடித்தது. தற்போது வரை மக்கள் வரவேற்பு கொடுப்பது ஒரு மேஜிக் எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், இன்று காலை நடிகர் ரஜினியைச் சந்தித்ததாகவும், அவரிடம் பேசும் போது மகிழ்ச்சியாக இருந்ததாகத் தெரிவித்த அவர், டெக்னீஷியன்கள் மட்டும் இன்றி தயாரிப்பாளர் பக்கமும் முழு ஒத்துழைப்பு இருந்தால் தான் நன்றாக அமையும். அண்ணாமலை படத்துக்கும் அது போல் நல்ல ஒத்துழைப்பு இருந்தது. குஷ்பு மற்றும் ராதா ரவி இருவரும் படத்தின் முக்கியமான பாத்திரங்கள் எனவும், அத்துடன் நிழல்கள் ரவி, சரத்பாபு, ரேகா ஆகியோரும் நன்றாக, இயல்பாக நடித்தனர். இவர்களுடன் மனோரமா கதாபாத்திரம் அருமை. சிறந்த கதையாக அண்ணாமலையைக் கொண்டாடுவது மகிழ்ச்சி எனவும் கூறினார்.

அண்மைச் செய்தி: ‘பிரதமரிடம் இந்த கேள்விய கேளுங்க; எம்.பி.க்கு உதயநிதி அட்வைஸ்’

ரஜினியை வைத்து படம் எடுக்கும் திட்டம் ஏதும் இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ரஜினிகாந்த்துடன் படம் செய்வதற்கு வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் பண்ணுவேன். அண்ணாமலை இல்லாமல் பாட்ஷா படம் கிடையாது. அண்ணாமலை படம் பாட்ஷாவிற்கு வெற்றியாக அமைந்தது எனக் கூறினார். பாட்ஷா 2 படம் வருமா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், பாபா படம் போய்க் கொண்டிருக்கும் போதே பாட்ஷா 2 குறித்த கேள்வி வந்தது. பாஷா படம் வந்து பல வருடங்கள் ஆகிறது. இன்றும் மைல் கல்லாகப் பேசப்படும் படம். அதன் இரண்டாம் பாகம் எடுப்பது ஒர்க் அவுட் ஆகுமா என்பது ரஜினிக்கே கேள்வியாக இருந்தது. அவரும் சற்று யோசித்தால் அதற்கான பணிகள் ஏதும் தொடங்கவில்லை எனக் கூறினார். தமிழ் சினிமாவின் தரம் குறைந்துள்ளதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், ரீமேக் படங்கள் பல மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. புதுமுகங்கள் நிறைய வருகின்றனர். பெரிய மாற்றங்கள் இந்திய அளவில் சினிமாவில் உண்டாகி வருகிறது எனத் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.