நடிகர் ’பூ’ ராமுவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் சசி இயக்கத்தில் 2008ஆம் ஆண்டு வெளியான பூ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் ‘பூ’ ராம். அடிப்படையில் நாடக கலைஞரான இவர், ஏற்றுக்கொண்ட பாத்திரத்தை அப்படியே பிரதிபலித்து நடித்ததால் திரையுலகில் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.
பூ, நீர்பறவை, தங்க மீன்கள், சூரரைப் போற்று என தந்தை கதாபாத்திரத்தில் இவர் நடித்த திரைப்படங்களை அனைத்தும் தங்களது தந்தையை நினைவூட்டுவதாக இருந்ததென ரசிகர்களின் மனமுருகி பாராட்டினர்.
பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் “பீ திங்கற பன்னி மாதிரி என்ன அடிச்சு அடிச்சு விரட்டுனாங்க… ஓடி ஒளிஞ்சுப் போய்டன்னா… அப்றம் எது அவசியம்னு தெரிஞ்சிக்கிட்டு பேய் மாதிரி படிச்சேன்…” என கல்வியின் மேன்மை குறித்து அவர் பேசும் வசனம் இன்னும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தன்னுடைய சிறந்த நடிப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே ராமு உருவாக்கி வைத்துள்ளார்.
இந்த நிலையில் நடிகர் பூ ராமு மாரடைப்பு ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அவரச சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைந்து நலம் பெற வேண்டும் என திரைப்பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.







