ஆகஸ்ட் 16ம் தேதி முதலமைச்சர் டெல்லி செல்ல இருப்பதாகவும், பிரதமரைச் சந்தித்து தமிழ்நாட்டின் நலனுக்காக பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடத்தப்பட்டது. செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த 28-ஆம் தேதி நடந்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியைத் தொடங்கி வைத்தார். 29-ஆம் தேதி முதல் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்தது. 11 சுற்றுகளைக் கொண்ட இந்த போட்டி சுவிஸ் முறையில் நடைபெற்றது. ஓபன் மற்றும் பெண்கள் பிரிவில் போட்டி நடத்தப்பட்டது. இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தொடக்க விழாவில் கலந்துகொள்ளப் பிரதமருக்கு நேரில் அழைப்பு விடுப்பதற்கு, நேரில் பிரதமரைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டிருந்தார். ஆனால், எதிர்பாராத விதமாக முதலமைச்சருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், அந்த பயணத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் 16-ஆம் தேதி முதலமைச்சர் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. டெல்லியில், பிரதமரைச் சந்திக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் கலந்துகொண்டதற்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழ்நாட்டின் நலன் சார்ந்து கோரிக்கைகளையும் விடுக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.








