முக்கியச் செய்திகள் தமிழகம்

“அரசாங்கம் ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமிப்பு என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது” – மநீம

அரசாங்கம் ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமிப்பு என சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: “சென்னை மதுரவாயல் ராமாபுரம் திருமலை நகரில், குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு, கடந்த 45 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் 600-க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகளை அகற்றுவது தொடர்பாக போடப்பட்டுள்ள வழக்கில் அரசு சரியான தரவுகளை முன்வைத்து, மக்களின் குடியிருப்புகளை காக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கோரிக்கை விடுக்கிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

சென்னை மதுரவாயல் ராமாபுரம் 155வது வட்டம் சர்வே எண். 239/2-ல் உள்ள திருமலை நகர், நேத்தாஜி தெரு, மூவேந்தர் தெரு, பெரியார் சாலை, கண்ணகி தெரு, வஉசி தெரு, கிருஷ்ணவேணி தெரு, JJ தெரு, அண்ணா தெரு ஆகிய இடங்களில் கடந்த 45 ஆண்டுகளாக 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

அவற்றில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் (தற்போது நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) 1994ஆம் ஆண்டு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் ஒப்புதல் பெற்று, வரைமுறைப்படுத்தி 600 சதுர அடிகள் வீதம் 276 குடும்பத்தினருக்கு வீட்டுமனை ஒதுக்கி அதற்குண்டான தொகையும் பெற்றுக்கொண்டது. முழுமையாக தொகை செலுத்தியவர்களுக்கு முறைப்படி பத்திரப்பதிவு செய்து கொடுக்கப்பட்டது. பத்திரப் பதிவு பெற்ற குடியிருப்புவாசிகள் சிலர், மத்திய அரசின் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் மானியம் பெற்று தளம் போட்ட வீடுகளும் கட்டினர்.

இதேபோல் 2001ஆம் ஆண்டு ராமாபுரம் வண்டிப்பாதை புறம்போக்கில் குடிசைகள் அமைத்து வாழ்ந்து வந்தவர்களை அகற்ற வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அந்த குடிசைகளை அகற்றுவதற்கு முன்பாக பாதிக்கப்பட்ட 77 குடும்பங்களுக்கு நிவாரணமாக, மாற்று இடம் வருவாய்த்துறை மூலம் தரப்படவேண்டும் என்று குறிப்பிட்டது. அதன்படி அவர்களுக்கு தலா 400 சதுர அடி பரப்பினை ஒதுக்கி லே-அவுட் தயார் செய்யப்பட்டு, 77 குடும்பங்களும் 276 குடும்பங்கள் வசிக்கும் அதே இடத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

2019 – ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தில், தொடரப்பட்ட பொதுநல வழக்கு இந்த மக்களுக்கு ஒரு பேரிடியாக அமைந்தது. அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட இடத்தில் வாழ்ந்து வரும் மக்களை தாங்கள் நீர்நிலைகளில் வசிப்பதாக அறிவித்து, காலி செய்யச் சொல்லியும் அங்கு இருக்கும் கடைகளுக்கு சீல் வைக்க முயற்சியும் துவங்கியது.

அதற்குப் பிறகு மக்கள் நீதி மய்யத்தின் முன் முயற்சியில் மற்ற அரசியல் இயக்கங்கள் மற்றும் சட்ட வல்லுநர்கள் ஆலோசனையுடன் இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் வழக்கு வரும் தேதிக்கு முன் மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையின் உதவியுடன் அங்கு வந்து மக்களை மிரட்டுவதும், கடைகளுக்கு சீல் வைக்க முயற்சிப்பதும் தொடர்கதையாகி வருகிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை அரசுத்துறைகள் விரைவாக தாக்கல் செய்யாமல் காலதாமதம் செய்கின்றது.

நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்பதில் மக்கள் நீதி மய்யத்திற்கு மாற்றுக்கருத்து இல்லை. நீர்நிலைகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்கான போராட்டத்திற்கு மய்யம் என்றும் துணைநிற்கும். அதே நேரம் அரசாங்கம் ஒதுக்கிய நிலங்களை திடீரென அவை நீர்நிலைகளில் இருப்பதாக சொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு தன்னுடைய ஆவணங்களை சமர்ப்பிக்கும்போது இந்த இடங்கள் அரசால் ஒதுக்கப்பட்டது என்பது நிரூபணமாகும். அதுவரையில் எந்தவித மேல் நடவடிக்கையையும் மாநகராட்சியும், காவல்துறையும் மேற்கொள்ளக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது.

வழக்கு முடிந்த பின் மக்கள் குடியிருக்கும் அந்த இடம் முறையாக வகை மாற்றம் செய்யப்பட்டு குடிமனைப் பட்டா அல்லது வீட்டு மனை பத்திரம் உடனடியாக அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் நீதி மய்யம் முன்வைக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு மேலும் மேலும் இன்னல்கள் ஏற்படுவதை இந்த அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.” இவ்வாறு மநீம தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram