விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் : முத்தரசன் கோரிக்கை

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும்…

விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் இயற்கை பேரிடர்களை கருத்தில் கொண்டு. தமிழ்நாடு முதலமைச்சரும், அரசும் மேற்கொண்ட நடவடிக்கைகள் உயிரிழப்புகளை தடுத்து குறைத்துள்ளன. அதே வேளை சென்னை பெருநகரிலும், அதன் சுற்றுவட்டாரங்களிலும் வீடுகள் மற்றும் சாலைகளில் மழை வெள்ளம் காரணமாக மக்கள் வாழ்க்கை நெருக்கடி அதிகரித்துள்ளது.

காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் கூடுதலாக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மூத்த அமைச்சர்களோடு முதலமைச்சரும், உயர் அதிகாரிகளும் களமிறங்கி நிவாரண நடவடிக்கைகளை செய்து வருவது வாழ்வை மீட்புக்கு நம்பிக்கையளிக்கும் செய்தியாகும். காவிரி பாசன மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை பார்வையிட்டு, நிவாரணம் வழங்க பரிந்துரைகளைப் பெற்று, போர்க்கால வேகத்தில் உதவிகள் வழங்குவது வரவேற்கத்தக்கது.

அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான குழுவின் அறிக்கையை இன்று (16.11.2021) பெற்றுக் கொண்ட முதலமைச்சர் உடனடியாக நிவாரணங்கள் அறிவித்துள்ளார். அறுவடைக்கு தயாராக இருந்து வெள்ளத்தால் சேதமடைந்த நெற்பயிர் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.20,000-ம் வழங்கப்படும். இத்துடன் நடவு செய்து 15 நாட்களை தாண்டாத நிலையில் ஏற்பட்ட வெள்ளத் தாக்குதலில் அனைத்தையும் இழந்து நிற்கும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ.6083 மதிப்புள்ள (ஏக்கருக்கு ரூ 2483/) இடுபொருள் வழங்கப்படும், சாலைகள், பாலங்களில் ஏற்பட்டுள்ள சேதங்களை சீரமைக்க 300 கோடி நிதியொதுக்கம் செய்யப்படும் என முதலமைச்சர் நிவாரணம் அறிவித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்பதுடன், அறிவிக்கப்பட்ட நிவாரணத் தொகுப்பில் நிவாரணம் கிடைக்கும் என நம்பிக்கையோடு, எதிர்பார்த்து காத்திருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கு நிவாரணம் ஏதும் அறிவிக்கவில்லை என்பது ஏமாற்றம் அளிக்கிறது.

தாளடி பயிர் நடவு முடிந்த நிலையில், வேர்பிடிப்புக்கு முன்னர் மழை வெள்ளத்தில் பயிர்கள் மூழ்கியதால் அதன் வேர்கள் அழுகி, அதன் முளைப்புத்திறன் இறந்து விட்டது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இடுபொருள் வழங்குவது மட்டும் போதாது என்பதை சுட்டிக்காட்டுகிறது. மேலும் அரசால் கட்டிக் கொடுக்கப்பட்ட பழைய தொகுப்பு வீடுகள், பல இடங்களில் வசிக்க முடியாத நிலைக்கு இடிந்து விழுந்து சேதம் அடைந்துவிட்டன. இந்த வீடுகளை புதுப்பித்துக் கட்டித்தர வேண்டும் என்ற கோரிக்கை நிவாரண அறிவிப்பில் இடம் பெறவில்லை என்பதை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு வருகிறது. வறுமையின் பிடியில் வாழ்ந்து வரும் அடித்தட்டு மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முதலமைச்சரையும், அரசையும் கேட்டுக் கொள்கிறது.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.