முக்கியச் செய்திகள் தமிழகம்

சிண்டிகேட் அமைத்து திரைப்படங்களின் வசூலை குறைத்து காட்டுகிறார்கள்- வருமானவரித்துறை

கடந்த சில நாட்களாக நடைபெற்ற சோதனையின்போது,  திரைப்படத்துறையில் கணக்கில் காட்டப்படாமல் 200 கோடி ரூபாய் அளவிற்கு வருமானம் புழங்குவது கண்டுபிடிக்கப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

தமிழ் திரைப்படத்துறையில் மிகவும் முக்கியமான பைனான்சியராக இருக்கும் அன்புச்செழியன், பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உள்ளிட்டோர் வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 4 நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். தமிழ் திரையுலகில் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் வருமானவரித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த 02.08.2022 அன்று திரைப்படத் துறையில் குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் பைனான்சியர்களோடு  தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  சென்னை, மதுரை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய நகரங்களில் உள்ள இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

பைனான்சியர்களின் இடங்களில் நடைபெற்ற சோதனையின்போது பல்வேறு திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களுக்கு கணக்கில் காட்டப்படாத பணக் கடன்கள் வழங்கியதற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள வருமான வரித்துறை, திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஒரு திரைப்படத்தின் வியாபாரம் குறித்து வழக்கமான கணக்கு புத்தகங்களில் குறிப்பிடப்பட்ட தொகைக்கும் அந்த படம் வெளியீட்டின்போது உணரப்படும் உண்மையான வியாபார தொகைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளதாக கூறியுள்ள வருமானவரித்துறை, இவ்வாறு கணக்கில் காட்டப்படாமல் ஈட்டப்படும் வருமானம், கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை வாங்குவதற்கும் கணக்கில் காட்டப்படாத பணப்பட்டுவாடாக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

தியேட்டர்களில் வசூல் ஆகும் தொகையை உரிய முறையில் கணக்குகாட்டாமல் ஈட்டப்படும் வருமானம் குறித்த ஆவணங்கள் திரைப்பட விநியோகஸ்தர்களுக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைபற்றப்பட்டுள்ளதாக வருமானவரித்துறை தெரிவித்துள்ளது. திரைப்பட விநியோகஸ்தர்கள் தங்களுக்கென்று ஒரு சிண்டிகேட் அமைத்து அதன் மூலம் தியேட்டர்களில் வசூலாகும் தொகையை குறைத்துக்காட்டுவதும் தெரியவந்துள்ளதாக வருமான வரித்துறைக் கூறியுள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட சோதனைகளில் மூலம் கண்டறியப்பட்ட கணக்கில் காட்டப்படாத வருமானம் 200 கோடி ரூபாயை தாண்டுவதாகக் கூறியுயள்ள வருமானத்துறை, கணக்கில் காட்டப்படாத 26 கோடி ரூபாய் ரொக்கம், மற்றும் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய தங்க நகைகள் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் வருமானவரித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்த கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான்!

Halley Karthik

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்த பெண் அகதி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Web Editor

சிஸ்டம் தோல்வியடைந்து விட்டதால், மக்களின் குரல்தான் முக்கியம்: ராகுல் காந்தி!

EZHILARASAN D