கடந்த 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் தொடங்கி, சுல்தான்பூர் மாவட்டத்தில் உள்ள கடிபூர் சட்டப்பேரவைத் தொகுதி தொடர்ந்து பட்டியலின வேட்பாளர்களுக்காக ஒதுக்கப்பட்டு வருவதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில், கடந்த 75 ஆண்டுகளாக ஒரே தொகுதி பட்டியலினத்தவர்களுக்காக ஒதுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் மூன்று அல்லது நான்கு குடும்பங்களைச் சேர்ந்தவர்களே மாறி மாறி அரசியல் ஆதாயம் அடைந்து வருவதாகவும் வாதிடப்பட்டது. மேலும், குறிப்பிட்ட சமூகத்தின் முன்னேற்றத்துக்காகக் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீட்டின் பலன் சில குடும்பங்களுக்கு மட்டுமே சென்றடைவதாகவும், சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ளாட்சித் தேர்தல்களைப் போல சுழற்சி முறையில் இடஒதுக்கீட்டை மாற்றியமைக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த நீதிபதிகள், ஒரு தொகுதி குறிப்பிட்ட சமூகத்தினருக்காக ஒதுக்கப்பட்டிருப்பதால் வாக்காளர்களின் வாக்குரிமை பாதிக்கப்படுவதாகக் கூற முடியாது என்றனர்,. மேலும் எந்தச் சமூகத்தைச் சேர்ந்த வேட்பாளருக்கும் நீங்கள் வாக்களிக்கலாம். ஆனால், உங்கள் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று கூற முடியாது. அதேபோல், நீங்கள் போட்டியிடுவதற்கும் ஒரே தொகுதி மட்டுமே வாய்ப்பாக இல்லை. பொதுத் தொகுதிகளிலும் போட்டியிடலாம்” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், ஜனநாயகத்தில் வாக்காளர்கள் வேட்பாளரின் சாதி அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்டு மட்டுமல்லாமல், அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் கொள்கைகளையும் கருத்தில் கொண்டு வாக்களிப்பார்கள் என்றார். தொடர்ந்து இடஒதுக்கீடு வழங்கப்படுவதால் சமூகத்தில் சாதி அடிப்படையிலான பிரிவினை உணர்வு ஏற்படுமா என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது சட்டமன்றத்தின் பொறுப்பு என்றும் குறிப்பிட்டனர்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 330 மற்றும் 332-ஆவது பிரிவுகள் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்து குறிப்பிடுகின்றன. ஆனால், எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட வேண்டும், அவற்றை எவ்வாறு சுழற்சி முறையில் மாற்ற வேண்டும் என்பது குறித்து 332-ஆவது பிரிவில் நேரடியாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினர். உள்ளாட்சித் தேர்தல்களில் இடஒதுக்கீடு மற்றும் சுழற்சி முறைக்கு வழிவகுக்கும் அரசியலமைப்பின் 243D, 243T ஆகிய பிரிவுகளை சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் பொருந்தும் வகையில் பரிசீலிக்க வேண்டும் என்ற மனுதாரரின் வாதத்தை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர்.
“அரசியலமைப்பையோ சட்டத்தையோ நீதிமன்றம் திருத்தி எழுத முடியாது. இடஒதுக்கீட்டில் சுழற்சி முறையை அறிமுகப்படுத்துமாறு உத்தரவிடுவதன் மூலம் சட்டத்தை மாற்ற முடியாது” என்றும், “நீதிமன்றம் நாடாளுமன்றத்தின் மூன்றாவது அவையாகச் செயல்பட முடியாது” எனவும் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தை அணுகுவதற்குப் பதிலாக, நாடாளுமன்றம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
முன்னதாக, தொகுதிகளின் இடஒதுக்கீட்டை சுழற்சி முறையில் மாற்றுவது சட்டமன்றத்தின் கொள்கை முடிவு என்றும், அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்த நிலையில், அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் அந்த கோரிக்கையை உச்ச நீதிமன்றமும் ஏற்க மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.




