நெகிழ்வுத்தன்மை அடிப்படையில் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஒட்டுநர், நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சென்னை, விழுப்புரம், சேலம் என 8 மண்டலங்களாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு முழுவதும் 600 முதல் 700 ஓட்டுநர்களும், நடத்துநர்களும் ஜூன் 30ஆம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றுள்ளனர். இதனால் 30,000 காலிப்பணியிடங்கள் உருவாகி உள்ளன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வேலைபளு அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக கடந்த ஜூன் மாதம் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறையில் காலியிடப் பணியிடங்கள் ஏற்படுவது இயற்கையானது. விரைவில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறுவதற்கான அறிவிப்பு வெளியாகும். ஓய்வு பெறும் வயதை 58-ல் இருந்து 60-ஆக உயர்த்துவதால் ஓய்வு பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முறைப்படி பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள், நடத்துநர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். விரைவில் இது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பிரிவில் அதிக எண்ணிக்கையிலான காலியிடங்கள் உள்ளன. ஒரு ஓட்டுநர் அல்லது நடத்துனர் திடீர் விடுப்பில் சென்றால், அவர் எதிர் பணியாளர் பதவியை கையாளும் நிலையில் இல்லை. மேலும் நடத்துனரால் ஒட்டுநர் பணியையோ அல்லது ஓட்டுநரால் நடத்துனர் பணியை கையாள முடியாத நிலை உள்ளது.
எனவே நெகிழ்வுத்தன்மை அடிப்படையில் தமிழகத்தில் கும்பகோணம், சேலம், கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய 5 போக்குவரத்துக்கழகங்களில் 812 பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. கும்பகோணம் 174, சேலம் 254, கோவை 60, மதுரை 136, நெல்லை 188 என 5 கோட்டங்களில் 812 பேர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
மேற்கொண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், தமிழ், ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும், கனரக வாகனம் ஓட்டுவதற்கான உரிமம் மற்றும் நடத்துநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









