தமிழ்நாட்டை வந்து சேர்ந்த 5,000 கனஅடி காவிரி நீர்! மகிழ்ச்சியில் விவசாயிகள்!

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டு எல்லையை வந்து சேர்ந்தது. தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள, காவிரியிலிருந்து உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு…

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்ட 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் தமிழ்நாட்டு எல்லையை வந்து சேர்ந்தது.

தமிழ்நாட்டில் குறுவை சாகுபடியை தடையின்றி மேற்கொள்ள, காவிரியிலிருந்து உரிய நீரைத் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இதையடுத்து கர்நாடகாவின் குடிநீர் தேவைக்கு போக, தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் வழங்கப்படும் என அம்மாநில துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் விளக்கம் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 487 கனஅடி நீரும், கபினி அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயிரத்து 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த நீரானது இன்று தமிழ்நாடு எல்லையான, தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிலிகுண்டுலு வந்தடைந்தது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை 900 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது படிப்படியாக உயர்ந்து, 2300 கன அடி நீர் வந்துள்ளது. இதனைதொடர்ந்து மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.