அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும் பேசினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசா நகரம் உருக்குலைந்து வருகிறது. ஹமாஸ் அமைப்பினரும் இஸ்ரேல் மீது சரமாரியாக ராக்கெட் குண்டுகளை வீசியும், இஸ்ரேல் நகரங்களுக்குள் ஊடுருவியும் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் இரு தரப்பிலும் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மீண்டும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இது தவிர பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும் அமெரிக்க அதிபர் பேசியுள்ளார்.
ஒரே வாரத்தில் இரு தலைவர்களுக்கும் இடையிலான இரண்டாவது உரையாடல் குறித்து அதிபர் பைடன் ட்வீட் செய்துள்ளார். அதில், இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் ஆதரவை அவர் மீண்டும் வெளிப்படுத்தினார். “இந்த வார இறுதியில் நான் இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் வெளிப்படுத்தவும், அமெரிக்க ராணுவ ஆதரவு பற்றிய தகவல்களை வழங்க இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் மீண்டும் பேசினேன். அனைத்து நாடுகளும் ஒரே பக்கத்தில் பேச வேண்டிய நேரம் இது.” பயங்கரவாத அமைப்பாக ஹமாஸ் உள்ளது என தெரிவித்துள்ளார்.
அதே போல், பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுடனும் தொலைபேசியில் பேசியது குறித்தும் ஜோ பைடன் பதிவிட்ட ட்வீடில், இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலைக் கண்டிப்பதற்காக பாலஸ்தீன அதிபர் அப்பாஸிடம் நான் பேசினேன், பாலஸ்தீன மக்களின் உரிமைக்காக ஹமாஸ் நிற்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினேன் என்று பிடன் கூறினார். “காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான பொருட்கள் சென்றடைவதை உறுதி செய்வதற்கும், மோதல் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும் செயல்படுகிறோம் என்று நான் அவர்களுக்கு உறுதியளித்தேன்.” என குறிப்பிட்டுள்ளார்.







