கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும் ஏடிகே மோகன் பகான் அணியும் இன்று மோதுகிறது.
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்.சி. தனது முதலாவது லீக் ஆட்டத்தில், 3 முறை சாம்பியனான ஏ.டி.கே. மோகன் பகானுடன் கொல்கத்தாவில் இன்று மோதுகிறது.
கடந்த இரு சீசனில் ‘பிளே-ஆப்’ சுற்றை கூட எட்டாமல் சொதப்பிய சென்னை அணியில் இந்த முறை நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. அண்மையில் தூரந்த் கோப்பை போட்டியில் சென்னை அணி கால்இறுதிவரை முன்னேறியது. இதே போல் ஐ.எஸ்.எல். போட்டியிலும் சிறப்பாக செயல்படுவதை ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
இதனிடையே, கால்பந்தில் தாக்குதல் பாணியில் ஆடுவதையும், நிறைய கோல்கள் அடிப்பதையும் விரும்புகிறேன். அதற்கு ஏற்ப வீரர்கள் தயாராக இருக்க வேண்டும். எதிரணி வீரர்கள் செய்யும் தவறுகளை நேர்த்தியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை அணியின் தலைமை பயிற்சியாளர் தாமஸ் பிர்டாரி தெரிவித்துள்ளார். கடந்த சீசனில் இவ்விரு அணிகளும் மோதிய இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. மற்றொரு ஆட்டம் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
-இரா.நம்பிராஜன்








