குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிற்க வைத்துவிட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது நேற்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானிக்கு அறிவிக்கப்பட்டது. வயது மூப்பு காரணமாக ஜனாதிபதி திரவுபதி முர்மு, அத்வானியின் வீட்டிற்கே சென்று விருதினை நேற்று வழங்கினார்.
இதில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பிரதமரும், அத்வானியும் உட்கார்ந்து கொண்டும், ஜனாதிபதி திரவுபதி முர்மு நின்றுகொண்டும் இருந்தபடி புகைப்படம் வெளியானது. இந்த புகைப்படம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிற்க வைத்து விட்டு நாற்காலியில் அமர்ந்திருந்த பிரதமர் மோடிக்கு கனிமொழி எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக புகைப்படத்தை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி, “பாஜக ஆட்சியில் அரசியல் சாசன தலைவரின் நிலை இதுதான். பாஜக ஆட்சியில் சாதிய, பாலின பாகுபாடு எந்தளவுக்கு இருக்கிறது என்பதை இந்தப் புகைப்படம் அப்பட்டமாக காட்டுகிறது” என விமர்சித்துள்ளார்.







