மாமன்னன் திரைப்பட கதை முன்னாள் சபாநாயகர் தனபாலின் அரசியல் வாழ்க்கையை தழுவியது என்ற கருத்து எழுந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியிக்கு தனபால் பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், ஃபஹத் ஃபாசில், லால், சுனில் என பலரும் நடித்துள்ள படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
உதயநிதி ஸ்டாலினுக்கு இது கடைசி படம் என்பதாலும், பரியேறும் பெருமாள் இயக்குநரின் படம் என்பதாலும் பெரும் எதிர்பார்ப்பு படத்துக்கு இருந்தது. மாமன்னன் படத்துக்கு நேற்று எதிர்பார்த்ததைவிடவும் நல்ல ஓபனிங் இருந்தது. குறிப்பாக உதயநிதி ஸ்டாலினுக்கு இதற்கு முன்பு இப்படி ஒரு ஓபனிங் வந்ததில்லை எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கதையில் வடிவேலு நடித்த பிரதான கதாபாத்திரம், முன்னாள் சபாநாயகர் தனபாலின் வாழ்க்கையை தழுவியது என்ற கருத்து பரவலாக பேசப்பட்டது. ஆனால் இதை படக்குழு உறுதி செய்யவில்லை. இந்நிலையில், இத்திரைப்படம் குறித்து முன்னாள் சபாநாயகர் தனபால் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு தொலைப்பேசி வாயிலாக பிரத்யேகமாக பதில் அளித்தார். அதில் மாமன்னன் படத்தில் இடப்பட்டிருக்கும் கதை என்னைப் பற்றியானது என்று கூறப்படுகிறது. இன்னும் அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை.
1972 லிருந்து அண்ணா திமுகவில் இருக்கிறேன். ஜெயலலிதா எனக்கு கட்சியில் அமைப்பு செயலாளர், அமைச்சர், துணை சபாநாயகர் பதவி, இரண்டு முறை சபாநாயகர் பதவி ஆகிய பதவிகளை கொடுத்து சிறப்பித்தார். எல்லா பதிவிகளையும் என்னுடைய திறமையையும் உழைப்பையும் நம்பி ஜெயலலிதா கொடுத்தார். அதில் நான் திறம்பட செயலாற்றி உள்ளேன்.
மாமன்னன் திரைப்படம் எனது அரசியல் வாழ்க்கையை மையக் கருத்தாக கொண்டது என்று தெரிவித்தார்கள். அப்படி இருந்தால் எல்லா புகழுக்கும் ஜெயலலிதா தான் காரணம். இது ஜெயலலிதாவுக்கு கிடைத்த வெற்றி. அதோடு தற்போது இருக்கக்கூடிய சினிமா, பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை என்றும் சினிமா, சினிமா தான் என்றும் முன்னாள் சபாநாயகர் தனபால் கூறினார்.