மணிகண்டன், ரமேஷ் திலக், மீதா ரகுநாத், இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் குட் நைட். இந்த படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ளார். குறட்டை பிரச்சனை கொண்ட ஹீரோ, தன்னை ராசி இல்லாதவள் என நினைக்கும் கதாநாயகி இவர்களின் குடும்ப உறவு முறை, நட்பு, அதில் ஏற்படும் பிரச்சனைகள் தான் குட் நைட் படத்தின் கதை.
அதீத குறட்டை பிரச்சனையால் அவதிப்படும் நாயகன் மணிகண்டன் தனது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களால் கிண்டலுக்கு ஆளாகிறான். குறட்டை பிரச்சனையால் தான் காதலித்த பெண்ணும் வேண்டாம் என சொல்ல மன அழுத்தத்திற்கு செல்கிறான். அதே நேரத்தில் தனது தாய், தந்தையின் இழப்புக்கு தன்னுடைய ராசி தான் காரணம் என நினைக்கும் நாயகி மீதா ரகுநாத் தாழ்வு மனப்பான்மையால் கஷ்டப்படுகிறாள். எதிர்பாராத விதமாக இருவரும் சந்திக்க காதல் மலர்கிறது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எல்லா பிரச்சனைகளும் முடிந்து விட்டது என நினைக்கும் போது மணி கண்டனின் குறட்டையால் மீதா ரகுநாத் தூங்க முடியாமல் உடல் நலக்குறைவால் அவதிப்படுகிறார். மணிகண்டனின் குறட்டை பிரச்சனைக்கு தீர்வு கிடைத்ததா இல்லையா என்பதை நகைச்சுவையுடனும், சுவாரஸ்யத்துடனும் படமாக்கியுள்ளார் இயக்குனர் விநாயக்.
உலகம் முழுவதும் குடும்பங்களில் நடக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சனை குறட்டை. குறிப்பாக வெளிநாடுகளில் குறட்டை பிரச்சனையால் பல்வேறு குடும்பங்களில் விரிசல்கள் ஏற்படுவதையும் நாம் பார்த்துள்ளோம். அப்படிப்பட்ட குறட்டையை மையமாக கொண்டு குடும்பங்களில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் நகைச்சுவை கலந்து நம்மை சிரிக்கும் வகையில் குட் நைட் திரைப்படம் உருவாகி உள்ளது.
விக்ரம் வேதா, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் இந்த படத்தில் கதா நாயகனாக நடித்துள்ளார். எளிமையான தோற்றத்தில் மிக சிறந்த நடிப்பை மணி கண்டன் வெளிப்படுத்தி உள்ளார். பக்கத்து வீட்டு பையனை போன்ற தோற்றம் கொண்ட மணி கண்டனை படத்தில் பார்க்கும் போது நம்மையே பார்க்கும் உணர்வை வெளிப்படுத்துகிறார். காதல், நகைச்சுவை, சென்டிமென்ட் என எல்லா காட்சிகளிலும் மிக சிறப்பான நடிப்பை மணி கண்டன் வெளிப்படுத்தியுள்ளது இப்படத்திற்கு மிகப்பெரிய பலம். அம்மா, அக்கா, மாமா, தங்கை இவர்களுக்கு நடுவில் வாழும்மிடில் கிளாஸ் பையனாக மணிகண்டன் அசத்தியுள்ளார். நாயகியுடனான காதல் காட்சிகள், குறட்டை பிரச்சினையை தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள், அழும் காட்சிகள் என பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார் மணி கண்டன்.
கதாநாயகியாக நடித்துள்ள மீதா ரகுநாத் மிக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தாழ்வு மனப்பான்மை கொண்ட பெண்ணாக எளிமையாக அமைதியான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கணவனை புரிந்து கொள்ளும் இடங்கள், குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், சின்ன சின்ன விஷங்கள் என அனைத்திலும் நம்மை ரசிக்க வைக்கிறார். கள்ளம் கபடம் இல்லாமல் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு மிகச்சிறப்பு.
மணி கண்டனின் மாமாவாக நடித்துள்ள ரமேஷ் திலக் காமெடியில் ஒரு பக்கம் கலக்கினாலும், மற்றொரு பக்கம் குடும்பத்தை அரவணைத்துக்கொண்டு செல்வதிலும், மனைவியிடம் அடங்கிப்போகும் இடத்திலும் நம்மை ரசிக்க வைக்கிறார்.
தாத்தாவாக நடித்துள்ள இயக்குனர் பாலாஜி சக்திவேல் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதே போல மற்ற நடிகர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரங்களை மிக சிறப்பாக செய்துள்ளனர்.
படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் என்றால் அது படத்தின் கதை தான். நல்ல கதையை ரசிகர்கள் கண்டிப்பாக கைவிட மாட்டார்கள். அதை மனதில் வைத்து இயக்குனர் இந்த படத்தை எடுத்துள்ளார். குறிப்பாக படத்தின் திரைக்கதையில் இயக்குனர் அதிக கவனம் செலுத்தி உள்ளார். மிடில் கிளாஸ் வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களையும் மிக உன்னிப்பாக கவனித்து அதை காட்சிப்படுத்தி உள்ளார். படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் நம் வீட்டில் நடப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. குறிப்பாக கர்ப்பிணியாக ரேச்சல் எழுப்பும் கேள்விகள் சமுதாயம் கட்டமைத்திருக்கும் பழமை வாதத்திற்கு தேவையான பாடம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
மொத்ததில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க ஏற்ற படம் குட் நைட்.