நடிகர் ராம் சரண் தனது சம்பளத்தை ரூ.100 கோடியாக உயர்த்தி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் ஷங்கர், பிரபல தெலுங்கு ஹீரோ ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் மூலம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். ராம் சரண் ஜோடியாக, பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடிக்கிறார்.
தமன் இசை அமைக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர் ஜெயராம், அஞ்சலி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
இந்த படத்தின் முதல் ஷெட்யூல், புனே அருகே கடந்த மாதம் நடந்தது. பாடல் காட்சி படமாக்கப்பட்டது. இதில் ராம் சரண் தேஜாவும் கியாரா அத்வானியும் பங்கேற்றனர். தெலுங்கு சினிமாவில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக பட்ஜெட்டில், இந்தப் பாடல் காட்சி உருவாக்கப்பட்டதாக செய்திகள் வெலியானது.
இந்நிலையில், இந்தப் படத்துக்கு சம்பளமாக ராம்சரண், 100 கோடி ரூபாய் பெற்றுள்ள தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காகவும் அவர் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றிருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ராஜமவுலி இயக்கத்தில் ’ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்திருக்கிறார் ராம் சரண். பான் இந்தியா முறையில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஜனவரி மாதம் 7 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்தப் படத்துக்குப் பிறகு தனது சம்பளத்தை ராம் சரண் உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.








