காதல் முறிவா? டோண்ட் வொர்ரி… லவ் பெட்டர்…. – நியூசிலாந்து அரசின் சூப்பர் முன்னெடுப்பு

காதல் முறிவினால் தவிப்பவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையிலும் நியூசிலாந்து அரசு ’லவ் பெட்டர்’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.  இளைஞர் சமூகம் எளிதில் காதல் வயப்படுவது வழக்கம். அவ்வாறு தனது இணையுடன்…

காதல் முறிவினால் தவிப்பவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையிலும் நியூசிலாந்து அரசு ’லவ் பெட்டர்’ பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. 

இளைஞர் சமூகம் எளிதில் காதல் வயப்படுவது வழக்கம். அவ்வாறு தனது இணையுடன் காதல் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டிருக்கும்போது, ஒரு சில காரணங்களாலும், பிரச்னைகளாலும் காதல் முறிவு ஏற்படுவதும் ஆங்காங்கே நடைபெறுவதை காண முடிகிறது.

அத்தகைய காதல் முறிவை சிலர் எதிர்கொண்டு ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ள முடியாத இளைஞர்கள் பலர் மனதளவில் பாதிக்கப்படுவதும், சோர்ந்து போவதும், உயிரை மாய்த்துக் கொள்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இது ஒருபுறம் என்றால், காதல் முறிவால் சிலர் ஆத்திரப்பட்டு தனது இணையரை அடித்து துன்புறுத்துவதும், கொலை செய்வதும் நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள் : ராகுல் காந்தி : பாதயாத்திரை முதல் பதவி பறிப்பு வரை….

இவ்வாறு காதல் முறிவினால் தவிப்பவர்களுக்கு ஆறுதல் கூறும் வகையிலும், வன்முறை சம்பவங்களை தடுக்கும் வகையிலும் நியூசிலாந்து அரசு, “Love Better” என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இதற்காக சுமார் 32 கோடி ரூபாயையும் அந்நாட்டு அரசு செலவிட திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய நியூசிலாந்து சமூக மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத்துறை இணை அமைச்சர் பிரியங்கா ராதாகிருஷ்ணன், “நியூசிலாந்தைச் சேர்ந்த 1,200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், காதல் முறிவை எதிர்கொள்ள தங்களுக்கு ஆதரவு தேவை என்று தெரிவித்தனர். இந்த ’லவ் பெட்டர்’ பிரச்சாரம், இளைஞர்களை ஊக்குவிக்க, அவர்களை மனதளவில் பலப்படுத்த சிறந்த வழியாக இருக்கும். மேலும் இது குடும்ப வன்முறை மற்றும் பாலியல் வன்முறைகளை ஒழிப்பதற்கான நியூசிலாந்து அரசின் யுக்தி” என்று தெரிவித்தார்.

நியூசிலாந்தில் ஆண்டுதோறும், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப வன்முறை சம்பவங்களும், 9,000-க்கும் மேற்பட்ட பாலியல் வன்முறை சம்பவங்களும் நடைபெறுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. இந்நிலையில் நியூசிலாந்து அரசு முன்னெடுத்துள்ள ’லவ் பெட்டர்’ பிரச்சாரத்திற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். உலகளவிலும் இந்த பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு கிட்டியுள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.