மீண்டும் கேப்டன் ஆகிறாரா கிங் கோலி?

மீண்டும் கேப்டன் ஆகிறாரா கிங் கோலி? இந்திய டெஸ்ட் அணியில் நீடிக்கும் குழப்பம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு. இந்தியா – இங்கிலாந்து சுற்றுப்பயணம்: இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய…

மீண்டும் கேப்டன் ஆகிறாரா கிங் கோலி? இந்திய டெஸ்ட் அணியில் நீடிக்கும் குழப்பம் என்ன? என்பது குறித்து விவரிக்கிறது இந்தச் செய்தி தொகுப்பு.

இந்தியா – இங்கிலாந்து சுற்றுப்பயணம்:

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ரோஹித் ஷர்மா தலைமையில் ஒத்திவைக்கப்பட்ட டஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இந்திய அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. 1 போட்டி சமனில் முடிந்த நிலையில், 2 போட்டிகளை இந்தியாவும், 1 போட்டியை இங்கிலாந்து அணியும் வென்றது. கடைசி போட்டியான 5வது டெஸ்ட் மழை காரணமாக இந்த வருடம் ஜூலை 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் 5 வது டெஸ்ட் போட்டியை வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி இங்கிலாந்து சென்று, பயிற்சி ஆட்டங்களில் ஆடி வருகிறது.

இந்திய வீரர்களுக்கு கொரோனா தொற்று:

கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள இந்திய வீரர்களுக்கு எதிர்பாராத விதமாக கொரோனா தொற்று அச்சுறுத்தல் கொடுத்ததை அடுத்து, தற்போது தலைமை ஏற்பதில் தலைவலி ஏற்பட்டுள்ளது. முன்னதாக இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் கொரோனாவல் பாதிக்கபட்ட நிலையில், அடுத்தடுத்து முன்னாள் கேப்டன் விராத் கோலி மற்றும் ரோஹித் சர்மா உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர். அஷ்வின் மற்றும் கோலி தொற்று பாதிப்பிலிருந்து குணமாகினாலும், இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா இன்னும் தனிமையில் இருப்பதால், அணியைத் தலைமை ஏற்பதில் சிக்கல். மாற்று கேப்டனாக துணை கேப்டன் பதவி வகிக்கும் கே எல் ராகுல் காயம் காரணமாக உயர் சிகிச்சைக்கு ஜெர்மனி செல்ல இருப்பதால், இந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.

இந்திய அணிக்கு கேப்டனாக மீண்டும் கோலி நியமனம்?:

தற்போது இந்திய அணியின் கேப்டன் பதவிக்கான தேடலில் ஜாஸ்பிரித் பும்ரா, பண்ட் மற்றும் கோலி மட்டுமே உள்ளனர். டெஸ்ட் கேப்டன் பதவியில் பும்ரா மற்றும் பண்ட் உள்ளிட்டோரை விட விராத் கோலி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கேப்டனாக விளங்கியவர். இந்நிலையில், தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் 5 வது டெஸ்ட் போட்டியின் கேப்டன் பதவியை விராத் கோலிக்கு வழங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த இந்த தொடரின் 4 போட்டிகளுக்கும் விராத் கோலி தான் கேப்டனாக விளங்கினார். இந்நிலையில், வரும் ஜூலை 1-ஆம் தேதி இங்கிலாந்தில் நடைபெறவுள்ள கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணியைத் தலைமை ஏற்க விராத் கோலிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவும், இங்கிலாந்து மண்ணும்!:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2021-23 அரங்கில் இங்கிலாந்து அணியை விட இந்திய அணி பலம் வாய்ந்ததாக இருந்தாலும், இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இடத்திற்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக விளையாடி 1971, 1986, 2007 ஆகிய ஆண்டுகளில் தொடரை கைப்பற்றியுள்ளது. வரும் ஜூலை 1-ஆம் நாள் நடக்கவுள்ள போட்டியை இந்திய அணி கைப்பற்றினால், 15 வருடங்கள் கழித்து இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தி தொடரை கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.