அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்க அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் 2,432 பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதிமுகவில் இரட்டை தலைமை என்கிற அத்யாயத்தை முடித்துவிட்டு மீண்டும் ஒற்றைத் தலைமை என்கிற அத்யாயத்தை கொண்டு வர கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தீவிரமாக முயற்சி எடுத்துவருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
வரும் ஜூலை 11ந்தேதி அதிமுக பொதுக் குழு கூட்டப்படும் என கடந்த 23ந்தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மகன் உசேன் அறிவித்தார். இவ்வாறு பொதுக் குழு கூட்டுவது செல்லாது என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் கூறியுள்ளனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடமும் ஓ.பன்னீர் செல்வம் புகார் அளித்துள்ளார். எனினும் எடப்பாடி பழனிசாமி அணியினர் ஜூலை பொதுக்குழு கூட்டத்திற்கான ஏற்பாடுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவில் மொத்தம் உள்ள 2,665 பொதுக்குழு மற்றும் செயற் குழு உறுப்பினர்களில், 2,432 பேர், எடப்பாடி பழனிசாமியை பொதுச் செயலாளர் ஆக்குவதற்கு ஆதரவு தெரிவித்து தங்கள் கையெப்பமிட்ட கடிதம் கொடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் செயற்குழு, பொதுக் குழு உறுப்பினர்களில் 91 சதவீதத்திற்கும் அதிகமானோர் எடப்பாடி பழனிசாமி அதிமுக பொதுச் செயலாளர் ஆவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.