பாஜகவினர் மீது பொய் வழக்குகள்-சுதாகர் ரெட்டி கண்டனம்

பாஜகவினர் மீது பொய் வழக்குகள் போடுவது தான் திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சியா? என்று பாஜகவின் மாநில துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார். விருதுநகர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில்…

பாஜகவினர் மீது பொய் வழக்குகள் போடுவது தான் திமுக அரசின் திராவிட மாடல் ஆட்சியா? என்று பாஜகவின் மாநில துணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.

விருதுநகர் பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநில துணை பொறுப்பாளர் சுதாகர
ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

பாஜகவில் மண்டல அளவிலான கருத்தாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜகவின் அனைத்துப் பிரிவு நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறேன்.

இதில், ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பிரச்சினைகளை கேட்டறிவதோடு, மத்திய
அரசின் திட்டங்கள் குறித்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு
வருவதோடு, கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தி வருகிறோம்.

மாநிலத் தலைவர் அறித்தபடி இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் என வீடுவீடாகச்
சென்று மக்களைச் சந்தித்து வருகிறோம். பாஜகவினர் மீது திமுகவும் காவல்துறையும் பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன.

பல மாவட்டங்களில் பாஜகவினர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யும் நடவடிக்கைகளை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசு திமுக அரசு, பாஜகவினர் மீது பொய் வழக்குகள் போடுவது தான் திராவிட மாடலா?

502 தேர்தல் வாக்குறுதிகளில் திமுக சில வாக்குறுதிகளை மட்டுமே நிறைவேற்றியுள்ளது.

திட்டங்களை அறிவித்து வருமானம் ஈட்டும் முயற்சியில் தான் உள்ளது. தமிழகத்தில்
டாஸ்மாக் மூலம் மட்டுமே வருமானம் அதிகமாக உள்ளதால் டாஸ்மாக் கடைகளை
அதிகரிக்கும் பணிகளை தான் இந்த திமுக அரசு செய்து வருகிறது.

பாரதிய ஜனதாவை பொருத்தவரை நாடு தான் முதல் இடம், இரண்டாவது தான் கட்சி. ஆனால் திமுகவை பொருத்தவரை முதலில் தங்கள் குடும்பத்தையும், அடுத்ததாக தங்களது கட்சியையும், அதற்கு அடுத்தபடியாக தான் தமிழ்நாட்டு மக்களையும்
வைத்திருக்கிறார்கள். குடும்ப அரசியல் தான் தமிழகத்தில் நடக்கிறது.

கடந்த 75 வருடங்களில் இல்லாத வளர்ச்சியை இந்த 8 வருடத்தில் பிரதமர் மோடி
செய்துள்ளார். நாட்டின் பெருமையை உலகறியச் செய்துள்ளவர் பிரதமர் மோடி.
பாதுகாப்புத் துறை பல மடங்கு வலுப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுக்கு 200 கோடி
தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு மட்டும் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் கோடி மத்திய அரசு
வழங்கியுள்ளது. ஆனால், எந்த அரசு அலுவலகத்திலும் பிரதமர் மோடி படம்
வைக்கப்படவில்லை.

தமிழக அரசு மக்களுக்காக செய்த செலவுகளை வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். கொடுத்த வாக்குறுதியில் எத்தனை திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன, எத்தனை செயல்படுத்தப்படவில்லை என்ற விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றார்.
சுதாகர் ரெட்டி.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.