விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக கவுண்டவுனை துவங்க நினைக்கிறதா.? – அன்புமணி ராமதாஸ் கேள்வி

நெய்வேலியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக அரசின் கவுண்டவுனை துவங்க நினைக்கிறார்களா? என பாமக் தலைவர் அன்புமணி  ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பாட்டாளி…

நெய்வேலியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை எதிர்ப்பதன் மூலம் திமுக அரசின் கவுண்டவுனை துவங்க நினைக்கிறார்களா? என பாமக் தலைவர் அன்புமணி  ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் விமானம் மூலம் சென்னையில் இருந்து தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது..

” நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில்
பாமக தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டில் நெல்லை மாவட்டம்
நாங்குநேரியில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடங்கி 23 ஆண்டுகள் ஆகியும் 13
நிறுவனங்கள் மட்டுமே அங்கு செயல்படுகிறது. 600 நபர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்னமும் சிறப்பு பொருளாதார மண்டலம் வளர்ச்சி பெறவில்லை. அதற்கான முயற்சியையும் ஆளும் திராவிட முன்னேற்றக் கழக அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தும் செய்யவில்லை. நெய்வேலியில் நேற்று நடத்தப்பட்ட போராட்டம் விவசாயிகளுக்காக நடத்தப்பட்ட போராட்டம்.  அந்த போராட்டத்தில் தடியடி நடத்தி பதற்றமான சூழலை உருவாக்கியது காவல்துறை தான்.

விவசாயிகள் விரோத போக்கை திமுக அரசு கடைபிடிக்க கூடாது. இது என்எல்சிக்கு எதிரான போராட்டமோ அல்லது அந்த பகுதி மக்களின் போராட்டமோ  அல்ல தமிழ்
சமூகத்திற்கான போராட்டம்.  நிலத்தை அழித்தால் சோறு கிடைக்காது என நீதிபதி
சொன்ன பிறகும் இன்று மீண்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு எதிரான போராட்டம் குறித்து பாட்டாளி மக்கள் கட்சி அறிவிக்கும்.

தமிழகம் மின்மிகை மாநிலமாக மாறிவிட்டது என அமைச்சர் கூறியுள்ள நிலையில்
நெய்வேலியில் கிடைக்கும் சொற்ப மின்சாரத்திற்காக விவசாய நிலத்தை அழிக்க
வேண்டாம். குறுகிய கால அரசியல் லாபத்திற்காக நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. தங்கம் தென்னரசு பள்ளியில் படிக்கும் காலத்திலிருந்து, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே என்எல்சிக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகிறோம். என்எல்சிக்கு எதிராக தலைமைச் செயலகத்திற்கு அழையா விருந்தாளியாக சென்று அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்தேன்.  இதனையா குறுகிய அரசியல் என்று கூறுகிறார்கள்

என் எல்சியில் தமிழர்களுக்கு உயர் பதவிகள் அளிக்கப்படவில்லை. தூய்மைப் பணிகள் போன்ற பணிகள் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.  தஞ்சை மாவட்டம் டெல்டா மாவட்டம் என முதலமைச்சர் நினைக்கிறார். அதேபோல கடலூரும் டெல்டா மாவட்டம்தான். தன்னை டெல்டா காரன் என்று சொல்லும் முதலமைச்சருக்கு
கடலூரில் நிலம் எடுப்பது குறித்த அக்கறை இல்லையா..?

அதிமுக ஆட்சியில்  அதிகமாக கடன் வாங்குகிறார்கள் என தொடர்ந்து
குற்றச்சாட்டுகள்  முன்வைத்த திமுக தற்போது ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு ஆண்டுகளில் 2 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளது . இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறப்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக 51 ஆயிரம் கோடி ரூபாய் பழைய கடன்களை அடைப்பதற்காகவும் அதற்கு வட்டி கட்டுவதற்காகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது

தமிழக அரசின் மொத்த கடன் 12.53 லட்சம் கோடியாக உள்ளது . 4.5 லட்சம் கோடி
பொது கடனாகவும் 7.25 லட்சம் கோடி நிர்வாக கடனாகவும் உள்ளது. இதே நிலை
தொடர்ந்தால் தமிழக அரசு திவால் ஆகிவிடும் . நாங்கள் டெல்லியில் என்டிஏ கூட்டணியில் இருக்கிறோம்.” என அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.