மிக குறுகிய காலத்தில் ,உலக அளவில் உச்சம் தொட்ட நிறுவனமாக மாறிய அதானி குழுமம் தற்போது கடன் சுமையால் தத்தளிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடக்கிறது அதானி குழுமத்தில்.
குஜராத்தை சேர்ந்த கவுதம் அதானி உலக அளவில் நான்காவது மிகப்பெரிய பணக்காரர். இவரின் அதானி குழுமம் மின் உற்பத்தி, கப்பல் போக்குவரத்து, சிறப்பு பொருளாதார மண்டலம், விமான நிலையங்கள், எரிவாயு, பசுமை மின் ஆற்றல் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் ஈடுபட்டு வருகிறது. சமீப காலமாக அவரது குழுமம், புதிதாக தொழிலை தொடங்காமல் ,ஏற்கனவே உள்ள நிறுவனங்களை அதிக அளவில் கையகப்படுத்தி வருகிறது. இதற்கான நிதியை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் கடனாக பெறுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கிரெடிட் சைட்ஸ் என்ற நிறுவனம் , அதானி குழுமத்தின் கடன் தொகை குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி சமீப காலமாக அதானி குழுமம் பிற நிறுவனங்களை விலைக்கு வாங்குவதில் அதிவேகமாக செயல்படுகிறது. அதனால் பெரும் கடன் சுமையில் அந்நிறுவனம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தேதிக்கு அதானி குழுமத்தின் மொத்த கடன் அளவு இரண்டு லட்சத்து ,31 ஆயிரம் கோடி ரூபாய். குழும நிறுவனங்களிடம் உள்ள ரொக்க தொகையை கணக்கிட்டாலும், அதானி குழும நிறுவனங்களின் கடன் தொகை ஒரு லட்சத்து 75 ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது என்கிறது கிரெடிட் சைட்ஸ் அறிக்கை.
தொழில் துறை வட்டாரங்களில் மட்டுமல்லாமல், அரசியல் வட்டாரங்களாலும் அதிகம் கவனிக்கப்படுவது, கௌதம் அதானியும், அதானி குழுமமும்தான் என்றால் மிகையில்லை. அதோடு அதானி தொடாத துறையே இல்லை, ஏற்கெனவே நடந்துவரும் பிற தொழில் நிறுவனங்களை அப்படியே வளைத்துப் போடுவது அதானி குழுமத்தின் சாமர்த்தியம். ஆளுங்கட்சியின் ஆதரவு இருந்தாலும் சுயமான முயற்சி, முதலீட்டு பலமும் உள்ளதால் தான்,தைரியமாக அகல கால் வைக்கிறது என்பது வர்த்தக நிபுணர்களின் கருத்தாக உள்ளது
புதிய நிறுவனங்களை வாங்கி குவிப்பதால் , அதானி குழுமத்தில் பண புழக்கம் கடுமையாக சரிந்துள்ளது. எனினும், வங்கிகளுடனான நெருக்கமான பிணைப்பு, பிரதமர் நரேந்திர மோடி உடனான நட்புறவு போன்ற காரணிகளால் அதானி குழுமம் பாதுகாப்பான சூழலில் தான் உள்ளது என்றும் கிரெடிட் சைட்ஸ் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த குழுமம் எதிர்பார்க்கும் வகையில் செயல்கள் நடைபெறாவிட்டால், மிகப் பெரிய கடன் பொறியில் அதானி நிறுவனம் சிக்கும். அதனால் பாதிக்கப்படுவது குழும நிறுவனங்கள் மட்டுமல்ல ,அதானி பங்குகளை வாங்கிய முதலீட்டாளர்களும்தான்.
அதானி குழுமம் சமீபத்தில் ஹோல்சிம் என்ற சிமென்ட் உற்பத்திப் பிரிவை 1,050 கோடி அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியது. அத்துடன் ஒடிசாவில் அலுமினிய உற்பத்தி ஆலை ,தாமிரம் சுத்திகரிப்பு,பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, பெட்ரோ ரசாயனத் தொழில்கள், தகவல் தொடர்பு ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கிறது. இவற்றில் அதிக வர்த்தகமும்,கொழுத்த லாபம் பெற வாய்ப்புள்ளது. ஆனால் அதானிக்கு இந்த புதிய துறைகளில் சிறிதும் முன் அனுபவம் கிடையாது. இவைகள் லாபம் தரக்கூடியவைதான் என்றாலும் மிகக் குறுகிய காலத்தில், லாபம் சம்பாதிக்க முடியாது. எனவே கடனுக்கு வட்டி செலுத்துவதே சவாலான வேலையாகவே இருக்கும் என கடன் மதிப்பீட்டு நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது.
மேலும் அதானி குழுமத்தில் கவுதம் அதானியை தவிர மற்ற நிர்வாகிகளுக்கு போதிய முன் அனுபவம் இல்லை. அடுத்த தலைமுறைக்கு நிறுவனத்தை கைமாற்றும் போது எழும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்த ஆய்வறிக்கையின் எதிரொலியாக, அதானி டிரான்ஸ்மிஷன், அதானி எண்டர் பிரைசஸ் தவிர, இதர நிறுவனங்களின் பங்குகள் முதல் நாள் 5 சதவீதமும், இரண்டாம் நாள் 10 சதவீதம் வரையும் சரிவடைந்தன என்பது குறிப்பிடதக்கது
இவ்வளவு பரபரப்பான சூழ்நிலையிலும், முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான என்டிடிவி-ன் 30 சதவீத பங்குகளை அதானி குழுமம் கையப்படுத்தியாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவலை என்டிடிவி மறுத்துள்ளது. 30 ஆண்டுகளில் தொழில் துறையில் உச்சம் தொட்ட அதானியின் அதிவேக பாய்ச்சல் ,லாபமாக மாறி . தொழில் துறைக்கும், பங்குதாரர்களுக்கும், பலனளிக்கும் வகையில் அமைய வேண்டும். இல்லையென்றால் அதானி குழுமமும், சத்யம் , வீடீயோகான், அனில் அம்பானியின் நிறுவனம் போல் மாறிவிடும் என்பதை மறுப்பதற்கில்லை.