உக்ரைன் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் – 25 பேர் பலி

உக்ரைனின் சேப்லின் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. ரஷ்யாவின்…

உக்ரைனின் சேப்லின் ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா நடத்திய ராக்கெட் தாக்குதலில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் 6 மாதங்களைக் கடந்துள்ளது. ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களுக்கு மத்தியில் உக்ரைன் நேற்று தனது சுதந்திர தினத்தை கொண்டாடியது.

இந்நிலையில், உக்ரைனின் நிப்ரோபெட்ரோவோக் மாகாணத்தில் உள்ள சேப்லின் நகர ரயில் நிலையத்தின் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தி உள்ளது. இதில், குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், இந்த தாக்குதல் குறித்து ரஷ்யா இதுவரை எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி, ஐநா பாதுகாப்பு அவையில் உரையாற்றுவதற்கான தயாரிப்பில் இருந்தபோது, இந்த தாக்குதல் சம்பவம் குறித்து தனக்கு தெரிவிக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்திற்கான ரஷ்யாவின் தயாரிப்பு இது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

பயணிகள் ரயில் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் 4 ரயில் பெட்டிகள் தீப்பற்றி எரிந்துள்ளன.

இந்த தாக்குதலில் இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் ஜாபோரிஜ்ஜா அணு உலை பகுதியை போர் பகுதியாக மாற்றும் நோக்கில் ரஷ்ய படைகள் குறிவைத்து செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கி, அணு உலைக்கு ஆபத்து ஏற்பட்டால் அது ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் பேரழிவை ஏற்படுத்தி விடும் என எச்சரித்துள்ளார்.

இதனிடையே, இந்த போர் அறிவற்ற செயல் என கண்டித்துள்ள ஐநா பொதுச் செயலாளர், இந்த போரால் லட்சக்கணக்கான மக்கள் உக்ரைனுக்குள்ளும் வெளியேயும் மோசமான வறுமையின் கீழ் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.