புஷ்பா படங்களின் மூலம் பான் இந்தியா நடிகராக உயர்ந்தவர் நடிகர் அல்லு அர்ஜுன். இவர் தற்போது ‘ஜவான்’ திரைப்பட இயக்குநர் அட்லீ குமாரின் இயக்கத்தில் ராக்கா என்னும் புதிய திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.
இதற்கிடையில் நடிகர் அல்லு அர்ஜுன் மும்பைக்கு குடிபெயர உள்ளதாக தகவல்கள் வலம் வரத்தொடங்கின. இது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் நடிகர் அல்லு அர்ஜுனின் தந்தையும் தயாரிப்பாளருமான அல்லு அரவிந்த் இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ; “இல்லை. அவரது தற்போதைய திரைப்படம் மும்பையில் படமாக்கப்பட்டு வருவதால், அது பார்ப்பதற்கு அப்படித் தோன்றலாம். ஆனால், அல்லுவின் மனமும் வீடும் ஐதராபாத்தில்தான் உள்ளன. அவரது குழந்தைகள் அங்குதான் பயில்கின்றனர்; அவருக்குப் பிரியமானவர்கள் அனைவரும் ஐதராபாத்தில்தான் வசிக்கின்றனர். அப்படியிருக்கையில், அவர் ஏன் மும்பைக்குக் குடியேறப்போகிறார்?” என்று கூறினார்.
இது தொடர்பாக கிடைத்துள்ள மற்றொரு தகவலின் படி, ‘ராக்கா’ திரைப்படத்தின் படபிடிப்பு காரணமாக நடிகர் அல்லு அர்ஜுன் ஐதராபாத் மற்றும் மும்பைக்கு சென்று வர வேண்டியுள்ளது. இதனால் அல்லு அர்ஜுன் மும்பையில் மாதம் ரூ.16 லட்சத்திற்கு வீடு வாடகைக்கு எடுத்துள்ளார். ஜூஹு தாரா சாலை சந்திப்பில் அமைந்துள்ள, இவ்வீட்டை நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் அவரது மனைவி சினேகாவுடன் மேற்பார்வையிட்டுள்ளார்.
இதனால் தான் நடிகர் அல்லு அர்ஜுன் மும்பைக்கு குடிபெயர உள்ளதாக வதந்திகள் உலா வர தொடங்கியுள்ளன.







