பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடு-சேலம் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு

காடையாம்பட்டி அருகே கே.மோரூர் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கியதில் முறைகேடுகள் புகாரில், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 11 பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது…

காடையாம்பட்டி அருகே கே.மோரூர் கூட்டுறவு சங்கத்தில் பயிர்க்கடன் வழங்கியதில்
முறைகேடுகள் புகாரில், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 11 பேர் மீது 9
பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீது
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுக்காவில் உள்ள கணவாய்புதூர் கிராமத்தில்
கே.என்.புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில்
கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்பு 359 விவசாயகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், கடன் வழங்கியதில் போலியாக 350 விவசாயிகளின் பெயரில் இரண்டு கோடியே 19 லட்சம் ரூபாய் கடன் வழங்கி முறைகேடு செய்துள்ளதாக புகார் கூறப்பட்டது.

கூட்டுறவு சங்கத்தில் கடன் பெறாமலேயே கடன் பெற்றதாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் புகார் தெரிவித்தனர். கணவாய்புதூர் கூட்டுறவு சங்க அப்போதைய தலைவர் கணபதி, வங்கி செயலாளர் சரவணன், காசாளர் கோவிந்தசாமி, ஆய்வாளர் சுப்பிரமணி, துணை தலைவர் ஜெயராமன், சுப்பிரமணி, ஜெயக்குமார், ராஜா, முனுசாமி, ஞானபிரகாசம்மாள், செல்வி ஆகியோர் இணைந்து, போலியாக விவசாயிகளுக்கு கடன் வழங்கியதாக கூறி, அந்த பணத்தை முறைகேடு செய்துள்ளதாக, சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புமற்றும் ஊழல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கே.என்.புதூர் கூட்டுறவு சங்கத்தின் ஆவனங்களை புறிமுதல் செய்தனர். அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததில், 359 பேர் கடன் வழங்கியதில் 9 பேருக்கு மட்டுமே 5 லட்சத்து 60ஆயிரம் ரூபாயை முறையாக கடன் வழங்கியதும், மீதமுள்ள 350 பேருக்கு முறைகேடாக கடன் வழங்கியதையும் கண்டு பிடித்தனர்.

கிணறு இல்லாத இறவை பாசனத்திற்கு சங்க தலைவர் கணபதி மற்றும் அவரது மனைவி வசந்தி உட்பட 25 பேருக்கு முறைகேடாக கடன் வழங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பட்டு வளர்ப்புக்கு காப்பீட்டு தொகை என விவசாயிகளிடம் 500 ரூபாய் வீதம் சுமார் 5 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் வசூலித்தும், தலைவர், செயலாளர் கையொப்பம் இல்லாமல் 208 பேருக்கு கடன்  வழங்கிய முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சேலம் லஞ்ச ஒழிப்புத்துறைபோலீசார் 11பேர் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரித்தனர். இதையடுத்து 11 பேர் மீதும் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.