நாமக்கல் அருகே மதுபோதையில் காரை ஓட்டி சென்று விபத்தை ஏற்படுத்தியதோடு, காவல்நிலையம் செல்ல மறுத்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த சிவமூர்த்தி என்ற இளைஞர், திருச்செங்கோட்டில் இருந்து காரில் நாமக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சேலம் சாலையில் ராயல் என்பீல்டு இருச்சக்கர வாகனம் விற்பனை கடை அருகே சென்றபோது, அடுத்தடுத்து இருசக்கர வாகனத்தில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
பின்னர் சிவமூர்த்தியை அப்பகுதி பொதுமக்கள் பிடித்து விசாரணை நடத்தியபோது, அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இது தொடர்பாக நாமக்கல் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போக்குவரத்து போலீசார் மற்றும் நாமக்கல் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவரை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சிவமூர்த்தி மதுபோதையில் இருந்ததால் தான் வரமாட்டேன் என அடம் பிடித்தனார். இதையடுத்து, அவரை வலுக்கட்டாயமாக பிடித்து போலீசார் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
போதை இளைஞரால் சேலம் சாலையில், பெரிதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் அந்த இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
– இரா.நம்பிராஜன்








