ஈராக்: சாலையில் கவிழ்ந்த பேருந்து – 21 பேர் உயிரிழப்பு!

தெற்கு ஈராக்கின் நசரியா அருகே பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்ததில் குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய கிழக்கில் அமைந்துள்ள ஈராக் நாட்டில் உள்ள நஜப் நகரில் புகழ்பெற்ற இஸ்லாமிய மத வழிபாட்டு தலம் உள்ளது. இந்த வழிபாட்டு தலத்திற்கு நாட்டின் பல்வேறு நகரங்களிலும் இருந்து மக்கள் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். அந்த வகையில், பசுரா மாகாணத்தை சேர்ந்த 41 பேர் பேருந்தில் நஜப் நகருக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது நஜப் நகரில் வழிபாட்டை முடித்துவிட்டு பேருந்தில் பசுரா நகருக்கு திரும்பியுள்ளனர்.

இதனிடையே தய் கியுர் மாகாணம் நசிர்ஹாய் நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றுள்ளனர். அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்து முற்றிலும் தீ பற்றி எரிந்தது. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் தீயில் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.