கியூபாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டர் அளவில் 6.1ஆக பதிவு!

கியூபாவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

கியூபாவின் மேற்கு கடற்பகுதியில் நேற்று மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த நிலநடுக்கத்தின் தீவிரம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக அளவிடப்பட்டுள்ளது. தலைநகர் ஹவானாவுக்கு மேற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், மான்டுவா (Mantua) அருகே உள்ள கடல் பகுதியில் இந்த அதிர்வு மையம் இருந்தது. ஆழம் சுமார் 10 முதல் 26 கிலோமீட்டர் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஹவானா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கட்டிடங்கள் அதிர்ந்தன. நிலநடுக்கத்தால் யாருக்கும் காயங்களோ அல்லது கட்டிட மற்றும் பொருட் சேதங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கம் புளோரிடா வரை உணரப்பட்டது. மியாமியில் உள்ள தேசிய வானிலை சேவை, மாநிலத்தின் தென்மேற்குப் பகுதியில் பல நில அதிர்வு அறிக்கைகள் கிடைத்ததாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக, ஓரியன்டே புவிப்பிளவு மண்டலம் இப்பகுதியில் அடிக்கடி நிலநடுக்கங்களை ஏற்படுத்துகிறது. இந்த மண்டலம் கடந்த நூற்றாண்டுகளில் பல வலுவான நிலநடுக்கங்களை உருவாக்கியுள்ளது. 2020 ஜனவரியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் நிலநடுக்கம் குறிப்பிடத்தக்கது. அது திறந்த கடலில் ஏற்பட்டபோதும் கியூபா மற்றும் கேமன் தீவுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.