ஈரான் தலைவர் காமேனி கொல்லப்பட்டார் – அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

ஈரான் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா நேற்று காலை முதல் ஏவுகணைகள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. டெஹ்ரானில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா காமேனியின் அலுவலகம் மற்றும் இல்லத்தைக் குறிவைத்தும் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதற்கு சாத்தியமான நிறைய அறிகுறிகள் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், கமேனி கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்கள் மூலம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ”வரலாற்றில் மிகவும் தீய மனிதர்களில் ஒருவரான கமேனி உயிரிழந்துவிட்டார். இது ஈரான் மக்களுக்கு மட்டுமல்ல, உலகளவில் கமேனியின் ரத்தவெறி கும்பலால் கொல்லப்பட்ட மக்களுக்குமான நீதி.

அமெரிக்காவின் உளவுத்துறை மற்றும் அதிநவீன கண்காணிப்பு அமைப்புகளில் இருந்து அவரால் தப்பிக்க முடியவில்லை. மேலும், இஸ்ரேலும் நெருக்கமாகப் பணியாற்றியதால், அவராலும், அவருடன் கொல்லப்பட்ட மற்ற தலைவர்களாலும் எதுவும் செய்ய முடியவில்லை.

ஈரானிய மக்கள் தங்கள் நாட்டைத் திரும்பப் பெறுவதற்கான மிகப்பெரிய வாய்ப்பு இது. இனி ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பிற பாதுகாப்புப் படையினருடன் அவர்கள் போராட விரும்பவில்லை. தேச பக்தர்களுடன் ஈரானின் புரட்சிகர காவல்படை மற்றும் பாதுகாப்புப் படையினர் ஒன்றிணைந்து, நாட்டை மகத்துவமாக்க செயல்படும் என நம்புகிறோம். அந்தச் செயல்முறை விரைவில் தொடங்க வேண்டும். காமேனியின் கொலை மட்டுமல்ல, நாடே ஒரே நாளில் சுத்தம் செய்யப்பட்டது. மத்திய கிழக்கில் முழு அமைதி என்ற நோக்கத்தை அடையும்வரை துல்லியமான தாக்குதல்கள் தொடரும்” என தெரிவித்துள்ளார். ஆனால் காமேனி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ஈரான் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.