#IPL2026 | சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை அணியை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கியது. 10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் நேற்று பெங்களூருவில் நடைபெற்ற 11வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு, சென்னை அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக பிலிப் சால்ட், விராட் கோலி களமிறங்கினர். கோலி 18 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் பெங்களூரு அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 250 ரன்கள் குவித்தது.

சென்னை தரப்பில் அன்ஜுல் கம்போஜ், ஜேமி ஓவர்டன், ஷிவம் துபே தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 251 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் சென்னை தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்குவாட் , சஞ்சு சாம்சன் களமிறங்கினர். இறுதியில் சென்னை அணி 19.4 ஓவரில் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் சென்னை சூப்பர் கிங்சை 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றிபெற்றது. பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் படுதோல்வியடைந்த சென்னை அணி நடப்பு ஐபிஎல் தொடரில் 3 ஆட்டங்களில் தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் (10வது இடம்) உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.