ஐபிஎல் இறுதி போட்டியில் கோப்பையை வெல்லப்போவது யார் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்த போட்டியில் ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதுகின்றன.
இந்தியாவின் கோடை கால கொண்டாட்டமான ஐபிஎல் திருவிழா அதன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மார்ச் 26ம் தேதி தொடங்கிய போட்டிகள், 70 போட்டிகளை கடந்து கோப்பைக்கான இறுதி போட்டியில் வந்து நிற்கிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
எதிர்பாராததை எதிர்பாருங்கள் என்ற வசனத்தைப்போல் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் பல ஆச்சரியங்கள் நடந்தன. பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சென்னை, மும்பை, கொல்கத்தா போன்ற அணிகள் முதல் சுற்றிலே வெளியேறி அதிர்ச்சி அளித்ததன.
புதிய அணியாக களம் கண்ட குஜராத், லக்னோ போன்ற அணிகளும், பல ஆண்டுகளாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ராஜஸ்தான் அணியும் சிறப்பாக செயல்பட்டன. குறிப்பாக 13 ஆண்டுகளுக்கு பிறகு ராஜஸ்தான் அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
தொடரின் தொடக்கத்தில் பலராலும் ஏளனமாக பார்க்கப்பட்ட குஜராத் அணி தனது தொடர் வெற்றிகள் மூலம் அனைவரின் கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளன. அணி மோசமான சூழலில் சிக்கி தவிக்கும் போதெல்லாம் எதாவது ஒரு வீரர் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றுள்ளார். பல அணிகள் பல ஆண்டுகளாக செய்ய முடியாததை களம்கண்ட முதல் ஆண்டிலேயே செய்து முடித்து அசத்தியிருக்கிறது குஜராத் அணி.
ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஷேன் வார்ன் தலைமையில் ஐபிஎல் தொடரின் முதல் கோப்பையை கைப்பற்றி அசத்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதல் ஆண்டிலேயே சிறப்பாக செயல்பட்டபோதிலும் மீண்டும் இந்த இடத்தை அடைவதற்கு 13 ஆண்டுகள் ஆகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை, மும்பை அணிகள் மட்டுமே ஐபிஎல் கோப்பைகளை கைப்பற்றி கொண்டிருந்த சமயத்தில் இந்த இரு அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது தொடருக்கு நல்லதே என கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.