டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தை ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டு பேர் தவறாகப் பயன்படுத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து, அவர்கள் இருவரையும் அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்தனர்.
அதிகாரிகள் சஞ்சீவ் கிர்வார், அனு துக்கா இருவரும் கணவன், மனைவி ஆவார். 1994ஆம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியா கிர்வார், டெல்லியில் இருந்து லடாக்குக்கும் அவரது மனைவி அருணாசல் பிரதேசத்துக்கும் உடனடியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது: டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தை வளர்ப்புப் பிராணியுடன் வாக்கிங் செல்வதற்காக மூடியதாக கிர்வார் மீது புகார் எழுந்தது. அவரும், அவரது மனைவியும் நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது போன்ற புகைப்படமும் ஊடகங்களில் வெளியானது. இதுதொடர்பாக உள்துறை அமைச்சகம் டெல்லி தலைமைச் செயலரிடம் அறிக்கை கோரியிருந்தது. அவரது அறிக்கை கிடைக்கப் பெற்ற உடன், இரு அதிகாரிகளையும் உள்துறை அமைச்சகம் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது.







