இந்தியாவிலே முதல் முறையாக ஜம்மு-காஷ்மீரின் பதர்வா நகரில் முதல் லாவண்டர் திருவிழாவை மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
பின்னர் விழாவில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பேசியதாவது:
தோடா மாவட்டத்தின் பதேர்வா நகரில் லாவண்டர் புரட்சி தொடங்கியுள்ளது. ஊரக வளர்ச்சிக் கொள்கைகளில் பிரதமர் மோடிக்கு இருக்கும் தெளிவான பார்வையை இது காட்டுகிறது. மத்திய அரசின் வளர்ச்சிக்கான கொள்கைகளுக்கு முன்னுதாரணமாக பதேர்வா லாவெண்டர் திருவிழா திகழும். நிலப் பகுதி மற்றும் பருவநிலை ஆகியவற்றின் அடிப்படையில் லாவண்டர் உற்பத்திக்கு பதேர்வா சிறந்த இடமாக இருக்கிறது.
இதன்மூலம், ஜம்மு-காஷ்மீரின் தொலைதூரப் பகுதிகளில் உள்ள சுமார் 5,000 விவசாயிகள் மற்றும் இளம் தொழில்முனைவோர் வேலைவாய்ப்பு பெறுவார்கள். 1,000-க்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் 200 ஏக்கரில் லாவண்டர் உற்பத்தியை செய்கின்றனர். வேளாண்-தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடங்குவதை ஊக்குவிக்கவும் இந்தத் திருவிழா உதவும் என்று ஜிதேந்திர சிங் தெரிவித்தார். விஞ்ஞானிகள், விவசாயிகள், வேளாண்மை சார்ந்த தொழில்முனைவோர்கள் ஆகியோர் நாடு முழுவதிலும் இருந்து இந்தத் திருவிழாவில் பங்கேற்றனர்.








