ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சேப்பாக்கத்தில் 7 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்!

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இன்று உட்பட போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.  இதே போல் ஏப்.23, 28,…

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு இன்று உட்பட போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.  இதே போல் ஏப்.23, 28, மே 1, 12, 24,26 ஆகிய தேதிகளிலும் போட்டிகள் நடைபெற உள்ளன.  இதனையடுத்து போட்டி நடைபெறும் தினங்களில் மாலை 5 முதல் இரவு 11 மணி வரையிலும் பகல் போட்டியின் போது மதியம் 1 முதல் இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“திருவல்லிக்கேணி பாரதி சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை செல்லலாம்.  வாலாஜா சாலையில் இருந்து வாகனங்கள் விக்டோரியா விடுதி சாலை செல்ல அனுமதி இல்லை.  பெல்ஸ் சாலை தற்காலிகமாக ஒரு வழிபாதையாக மாற்றப்படும்.  பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பிலிருந்து வாகனங்கள் செல்லலாம். வாலாஜா சாலை – பெல்ஸ் சாலை சாந்திப்பிலிருந்து பெல்ஸ் சாலைக்கு வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

கண்ணகி சிலையில் இருந்து வரும் மாநகர பேருந்துகள் பெல்ஸ் சாலைக்கு செல்ல அனுமதி இல்லை.  மாநகர பேருந்துகள், நேராக ரத்னா கஃபே சந்திப்பு வழியாக திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.  இதேபோல ரத்னா கபே சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள் பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து பெல்ஸ் சாலை வழியாக வாலாஜா சாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

பாரதி சாலை – பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து நேராக வரும் வாகனங்கள் கண்ணகி சிலை செல்வதற்கு அனுமதி இல்லை.  வாலாஜா சாலையில் இருந்து வரும் வாகனங்கள் பெல்ஸ் சாலைக்கு செல்லவதற்கு அனுமதி இல்லை.  போட்டியைக் காண செல்பவர்களிடம் வாகன நிறுத்த அனுமதி அட்டை இல்லாத நிலையில், மெரீனா கடற்கரையின் உட்புறச் சாலையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.