சர்வதேச யோகா தினம்: விழிப்புணர்வை ஏற்படுத்திய மத்திய அமைச்சர்கள்… ஆளுநர்கள்… அரசியல் தலைவர்கள்

சர்வதேச யோகா தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 2015.ம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. பண்டைய நடைமுறையான யோகாவின்…

சர்வதேச யோகா தினத்தையொட்டி மத்திய அமைச்சர்கள், ஆளுநர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் யோகாசனங்கள் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

2015.ம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கப்பட்டது. பண்டைய நடைமுறையான யோகாவின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட யோகா தினத்தை ஐநா அங்கீகரித்தது. அதன்படி, 9வது சர்வதேச யோகா தினம் ஒரே பூமி, ஒரு குடும்பம், ஒரு எதிர்காலம் என்ற கருப்பொருளை மையமாக கொண்டு கடைபிடிக்கப்படுகிறது. கேரளா மாநிலம், கொச்சியில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு யோகாசனங்களை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கலந்து கொண்டார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டியா கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சிக்கிமில் உள்ள ராணுவ தளத்தில் வீரரகள் யோகா தினத்தை கொண்டாடினர். கடும் பனிமூட்டத்திற்கு இடையே ராணுவ வீரர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் வீரர்கள் தண்ணீரில் யோகா செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நீச்சல் குளத்தில் மூவர்ண கொடி நிறத்தில் ஆடைகளை அணிந்திருந்த ராணுவ வீரர்கள் தண்ணீருக்கு அடியில் சென்று யோகாசனங்களை செய்தனர். அந்தமானில் நடைபெற்ற யோகா தின கொண்டாட்டத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். மேலும், மாணவ, மாணவிகளுடன் யோகா செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  • பி.ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.