அமெரிக்காவில் துவக்கப்பள்ளியில் துப்பாக்கிச்சூடு – 18 மாணவர்கள் உட்பட 21 பேர் பலி

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி சிறுவர்கள் 18 பேர் உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டெக்ஸாஸ்…

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் பள்ளி சிறுவர்கள் 18 பேர் உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெக்ஸாஸ் மாகாணத்தின் உவால்டி என்ற இடத்தில் இயங்கி வரும் பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற சல்வடார் ரோமோஸ் என்ற 18 வயது இளைஞன், கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளார். இந்த தாக்குதலில் 18 மாணவர்கள், ஒரு ஆசிரியர் உட்பட 21 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காவலர்கள் இருவர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் நடத்திய பதில் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளான்.

சான் ஆன்டோனியோ நகரில் இருந்து 135 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வசித்து வந்த அந்த இளைஞன், வீட்டில் இருந்து கிளம்பும்முன் தனது பாட்டியை துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளான்.

இந்த இருவேறு துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும், வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூடு குறித்து வேதனை தெரிவித்துள்ள அதிபர் ஜோ பைடன், துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு எதிராக கடவுளின் பெயரால் நாம் அனைவரும் உறுதியுடன் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இதுபோன்ற நிகழ்வுகள் உலகின் பல பகுதிகளிலும் அவ்வப்போது நிகழத்தான் செய்கிறது என்று தெரிவித்துள்ள ஜோ பைடன், ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தேசிய கொடியை அரை கம்பத்தில் பறக்க விடும்படி அவர் உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.