மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை – உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூல் செய்ய இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில்,

“மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை கடந்த 2011ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் மரங்கள் நடுவது மற்றும் நெடுஞ்சாலையின் center median-யில் செடிகள் நட்டு பராமரிப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து பராமரிப்பு செய்ய வேண்டும். ஆனால் தனியார் நிறுவனம் அதற்கான வசதிகளை செய்யவில்லை.

முறையான பராமரிப்பு பணி மேற்கொள்ளாத காரணத்தை சுட்டிக்காட்டி தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கடந்த 2023ஆம் ஆண்டு தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனம் மதுரை தூத்துக்குடி நெடுஞ்சாலையை பராமரிக்க 563.83 கோடி ரூபாய் செலவு செய்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செலவு செய்யவில்லை.

மேலும் ஒப்பந்த தொகையை விட கூடுதலான தொகையை தனியார் நிறுவனம் சுங்க சாவடி கட்டணம் மூலம் வசூல் செய்துள்ளது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் இந்த சாலையை பராமரிக்கும் பணியை மேற்கொண்டு வந்தாலும், மாதத்திற்கு 11 கோடி ரூபாய் சுங்க கட்டணம் மூலம் வசூல் செய்து, பராமரிப்பு பணிக்காக வெறும் 30 லட்சம் மட்டுமே செலவு செய்து வருகின்றது.

இதனால் போதுமான சுங்கச்சாவடி கட்டணம் செலுத்தியும், தரமான சாலை மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறங்களும் மரங்கள் நட்டு வாகன ஓட்டிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் வரை சுங்க கட்டணம் வசூல் செய்ய தடை விதிக்க உத்தரவிட வேண்டும்” என மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரியா கிளாட் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளின் விவரங்களை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, இரண்டு வார காலங்களுக்கு வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.