பாலஸ்தீனத்திற்கு ஆதரவு… இந்திய வம்சாவளி மாணவி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தடைவிதித்த அமெரிக்க எம்ஐடி!

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேசியதால், இந்திய வம்சாவளி பெண் மேகா வெமுரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்கு மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகம் தடை விதித்துள்ளது. 

எம்ஐடி-யின் 2025-ம் ஆண்டு வகுப்புத் தலைவரான மேகா வெமுரி வியாழக்கிழமை (மே 29) மாசசூசெட்ஸின் கேம்பிரிட்ஜில் நடைபெற்ற ‘ஒன்-எம்ஐடி’ (OneMIT) தொடக்க விழாவில் கலந்து கொண்டு பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகவும் இஸ்ரேலை கண்டித்தும் உரையாற்றினார். இதனால் வெள்ளிக்கிழமை (மே 30) நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை. மேலும், பட்டமளிப்பு விழா முடியும் வரை பல்கலைக்கழக வளாகத்துக்குள் நுழையவும் தடை விதிக்கப்பட்டது.

“எம்ஐடி ஒரு சுதந்திரமான கருத்து வெளிப்பாட்டை ஆதரிக்கிறது, ஆனால் அதன் முடிவில் உறுதியாக உள்ளது. இது அந்த நபர் வேண்டுமென்றே மற்றும் மீண்டும் மீண்டும் தொடக்க ஏற்பாட்டாளர்களை தவறாக வழிநடத்தி, மேடையில் இருந்து ஒரு போராட்டத்தை வழிநடத்தி, ஒரு முக்கியமான நிறுவன விழாவை சீர்குலைத்ததற்கு பதிலளிக்கும் விதமாக இந்த தண்டனை இருக்கும்” என்று எம்ஐடி செய்தித் தொடர்பாளர் கிம்பர்லி ஆலன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மேகா வெமுரி, “இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கும் ஒரு நிறுவனத்தின் மேடையைக் கடந்து செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நான் கருதுகிறேன். எனினும், எம்ஐடி அதிகாரிகள் உரிய நடைமுறை இல்லாமல் என்னைத் தண்டிக்க முயன்றதால் பெருமளவில் நான் ஏமாற்றமடைந்துள்ளேன். நான் உரையாற்றியதால் பல்கலைக்கழகத்தின் எந்தவொரு விதியும் மீறப்படவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

வெமுரி சொன்னது என்ன?.

“இப்போது, ​​நாங்கள் பட்டம் பெற்று எங்கள் வாழ்க்கையைத் தொடரத் தயாராகி வரும் வேளையில், காசாவில் எந்தப் பல்கலைக்கழகங்களும் எஞ்சியிருக்கவில்லை. இஸ்ரேல் பாலஸ்தீனத்தை பூமியிலிருந்து மொத்தமாக துடைத்தெறிய முயற்சிப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், மேலும் MIT அதன் ஒரு பகுதியாக இருப்பது வெட்கக்கேடானது.” எனப் பேசினார். இவரின் இந்த உறையை பல மாணவர்களும் பாராட்டினர். சிலர் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டாலும், அவருடைய பட்டப்படிப்பு சான்றிதழ் அஞ்சல் மூலம் அவருக்கு அனுப்பி வைக்கப்படும் என வெமுரினியின் தந்தை தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.