கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பெரிய புறங்கனி கிராமத்தை சேர்ந்த கபடி வீரர் விமல்ராஜ், விளையாடி கொண்டிருந்தபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார். அவரது இறப்புக்கு பலரும் வேதனை தெரிவித்தனர். இந்நிலையில், விமல்ராஜ் குடும்பத்தினரை விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன், சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் விமல்ராஜ் உயிரிழந்தபோது, தமிழ்நாடு அரசு அவரது குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருந்தது. அந்த தொகையை அமைச்சர்கள் கபடி வீரர் விமல்ராஜ் குடும்பத்தினருக்கு வழங்கினர். மேலும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தனது சொந்த நிதியான 2 லட்சத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மெய்யநாதன், விளையாட்டுத்துறை அமைச்சர் என்கிற முறையில் விமல்ராஜ் உயிரிழப்பு ஏற்கமுடியவில்லை என்றார். விளையாட்டு மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரர் வீடியோவை பலகோடி பேர் பார்த்து மனவேதனை அடைந்ததாக தெரிவித்தார்.
ஏழ்மையின் பிடியில் இருந்த இளைஞன் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கபடியில் சிறந்து விளங்கியுள்ளார். இவர்களை போன்றவர்கள் தான் பலன் எதிர்பாராமல் நாட்டிற்கு பெருமை சேர்ப்பவர்கள் என்ற அவர், “நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்கு தேவையானதை செய்ய என கூறினார்.
இது போன்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க கபடி வீரர்களுக்கு காப்பீடு திட்டம் ஏற்படுத்தி தர நடவடிக்கை மேற்கொள்ள திட்டம் உள்ளது என தெரிவித்தார். விமல்ராஜ் உயிரிழப்பு தமிழகத்திற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என்றும் அமைச்சர் மெய்யநாதன் வருத்தம் தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்