கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் மா. அரவிந்த் அறிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை மே 29ஆம் தேதி துவங்கியது. கேரளத்திலும் தென்மேற்குப் பருவமழை பெய்து வருகிறது. கேரள மாநிலத்தில் இடுக்கி, ஆலப்புழா, கோட்டயம், எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான எல்லோ அலெர்ட் விடப்பட்டுள்ளது. வயநாடு மாவட்டம் தவிர எஞ்சிய 13 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது மலையோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முதல் 5 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, நீலகிரி, தேனி, ஈரோடு, சேலம், தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, சிவகங்கை, திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆராய்ச்சித் துறையின் அறிவிக்கையின்படி, கன்னியாகுமரி மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை அதிகனமழை பெய்யும் என முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கவும், மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வெள்ளத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் மற்றும் வெள்ளம் தேங்கிய விவரங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் இயங்கும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 04652-231077 என்ற எண்ணுக்குத் தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ம.பவித்ரா








