கள்ளக்குறிச்சியில் புதிதாக பொறுப்பேற்ற மாவட்ட காவல் துறை எஸ்.பி. பகலவன் மாணவி உயிரிழந்த பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளிக்கு எதிராக போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் புதிய மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட பகலவன், எஸ்பி அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார்.
எஸ்பியாக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் கனியாமூர் தனியார் பள்ளியில் பகலவன் ஆய்வு மேற்கொண்டார். மாணவி உடல் கிடந்த இடம், மாணவி படித்த வகுப்பறை மற்றும் தங்கியிருந்த விடுதி அறை ஆகியவற்றையும் எஸ் பி பகலவன் ஆய்வு செய்தார்.
பள்ளியைச் சுற்றி வன்முறை நிகழ்ந்த இடங்களையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் எஸ்.பி. பகலவன் கூறுகையில், “கலவரத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் கைது நடவடிக்கை தொடரும்” என தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோ பதிவுகள், காவல்துறை சார்பில் கைப்பற்றப்பட்ட வீடியோக்கள் அடிப்படையில் கைது நடவடிக்கை தொடரும் என்றும் கூறினார்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி +2 படித்து வந்தார். பள்ளியின் விடுதியில் தங்கி அவர் படித்து வந்த நிலையில் திடீரென அவர் 3வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோர்களிடம் கூறி உள்ளது.
இதையடுத்து, அந்த மாணவியின் உறவினர்கள் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து இளைஞர்களும், அப்பகுதி மக்களும் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போராட்டம் வன்முறையாக மாறியது. அதைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர்.








