திருத்தணி அருகே நகைக் கடையில் நூதன முறையில் நகைகளை கொள்ளையடித்துவிட்டு தப்பியவர்களை சிசிடிவி கேமரா காட்சி மூலம் போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி பஜார் பகுதியில் அசோக் குமார் என்பவருக்கு சொந்தமான நகைக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு இரு சக்கர வாகனத்தில் இரண்டு பேர் வந்துள்ளனர். ஒருவர் இரு சக்கர வாகனத்துடன் நகைக்கடையின் வெளியே நின்றுகொள்ள, மற்றொரு இளைஞர் உள்ளே சென்று நகைகள் வாங்க வந்துள்ளதாகக் கூறியுள்ளார். நகைகளை காண்பிடித்த போது அவற்றின் டிசைன் பிடிக்கவில்லை எனக் கூறியுள்ளார். இதையடுத்து எதிரே பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான கடையில் இருந்து 12 சவரன் எடை கொண்ட நான்கு தங்க செயின்களை கொண்டு வந்து காண்பித்துள்ளனர்.
அப்போது அவர்களின் கவனத்தை திசைதிருப்பிய இளைஞர் தங்க செயின்களுடன் எதிரே இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த மற்றொரு இளைஞருடன் சேர்ந்து தப்பிச் சென்றுள்ளார். கடையின் ஊழியர் அவர்களை மடக்க முயன்றபோது அவரை தள்ளிட்டு இருவரும் தப்பியுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவினை ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் நகைகளை கொள்ளையடித்தவர்களை தேடி வருகின்றனர்.







