அடுத்த 21 நாட்களுக்குள் 36 லட்சம் தடுப்பூசிகள் தேவை: அமைச்சர் மா.சுப்ரமணியன்

தமிழ்நாட்டிற்கு ஜூன் மாத இறுதிக்குள் 36 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை மதுரவாயலில் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ்காந்த்…

தமிழ்நாட்டிற்கு ஜூன் மாத இறுதிக்குள் 36 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மதுரவாயலில் முன்னாள் கவுன்சிலர் ரமேஷ்காந்த் திமுக சார்பில் ஏற்பாடு செய்திருந்த கொரோனா நிவாரணப்பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, “அரசின் நடவடிக்கைகளால், கொரோனா தொற்று வேகமாக குறைந்து வருவதாகவும், விரைவில் கொரோனா தொற்று இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்கு 46ஆயிரத்து 072 படுக்கைகள் காலியாக உள்ளது. மத்திய அரசு இந்த மாதத்துக்கான கொரோனா தடுப்பூசிகளை அனுப்பவில்லை. இதன்காரணமாக தமிழகத்தில் போதிய அளவு கொரோனா தடுப்பூசி இல்லை என்பது உண்மைதான்.

ஜூன் மாதத்துக்கு மத்திய தொகுப்பிலிருந்து 42 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் ஒதுக்கப்பட்டது. அவற்றில் 5 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே தமிழ்நாட்டிற்குக் கிடைத்துள்ளது. மீதமுள்ள 36 லட்சத்து 50 ஆயிரம் தடுப்பூசி இந்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம். அதில் வரும் 13-ம் தேதிக்குள் 6 லட்சத்து 50 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகத்திற்கு உடனடியாக வழங்கப்படும் என எதிர்பார்க்கிறோம்” என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.