கோவின் இணையதளத்தில் தமிழ் மொழி சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது சேர்க்கப்பட்டுள்ளது.
உலக அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது. இந்தியாவில் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தடுப்பூசி மிகப்பெரிய ஆயுதமாக பயன்பட்டு வருகிறது. இதனையடுத்து பல மாநிலங்களிலும் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வருகிறது. தடுப்பூசி செலுத்துவதை முறைபடுத்த கோவின் இணையதளத்தில் முன்பதிவு செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், இந்த இணையதளத்தில் ஆங்கிலம், இந்தி மொழியுடன் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் இடம் பெற்றிருந்தது. தமிழ் இடம்பெறவில்லை.
இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். மேலும், பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர். இதனையடுத்து தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை தனது அதிருப்தியை மத்திய அரசுக்கு தெரிவித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, கோவின் இணையதளத்தில் தமிழ் 2 நாட்களுக்குள் சேர்க்கப்படும் என மத்திய அரசு தெரிவித்ததாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. ஆனால், இரு நாட்கள் கடந்த பின்னரும் தமிழ் மொழி இணையதளத்தில் இடம்பெறவில்லை. இது இணைய வாசிகளிடம் மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து தற்போது கோவின் இணையதளத்தின் மொழி அட்டவணையில் தமிழ் 12வது மொழியாக சேர்க்கப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ள கோவின் இணையதளத்தை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கியது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் இதுவரை 2,89,96,473 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போதுவரை 23 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும், 4.5 கோடி பேருக்கு இரண்டு தவனை தடுப்பூகளும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, கொரோனா தடுப்பூசி மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.







