ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்து இந்திய அணிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறார் கில்.
இந்தியா – ஆஸ்திரேலியா இடையயான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தன் முதல் இன்னிங்ஸில் 480 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கவாஜா, க்ரீன் சதமடித்த அசத்தியிருந்தனர். ஏற்கனவே அந்த அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிட்டது. இந்நிலையில் இந்திய அணி இந்தப் போட்டியில் வென்றால்தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை உள்ளது.
இந்திய அணி முதல் இன்னிங்ஸில் சிறப்பாகவே விளையாடி வருகிறது. கேப்டன் ரோஹித் சர்மா – சுப்மன் கில் ஜோடி நல்ல ஓப்பனிங் கொடுத்தனர். ரோஹித் 35 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு புஜாராவுடன் இணைந்து கில் சிறப்பாக ஆடினார். கில் சதமடித்து அசத்தினார். புஜாரா – கில் பார்ட்னர்ஷிப் 113 ரன்கள் எடுத்தது. புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கோலி – கில் இணை சிறப்பாக ஆடியது.
சிறப்பாக ஆடிய கில் 128 ரன்களில் ஆட்டமிழந்தார். தனது கிளாசிக்கான ஆட்டம் மூலம் இந்திய அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்துள்ளார். கில்லுக்கு முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கவில்லை. கே.எல்.ராகுல் சொதப்பியதால் மூன்றாவது டெஸ்ட்டில் தான் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் போட்டியில் இந்தியா தோல்வியை சந்தித்தாலும், முக்கியத்துவம் வாய்ந்த 4வது போட்டியில் கில் சதமடித்திருப்பது அவர் மீதான நம்பிக்கையை அதிகரித்திருக்கிறது.
கடும் வெயிலில் அவர் ஆடிய சிறப்பான ஆட்டத்தை கௌரவிக்கும் விதமாக, கில் அவுட்டாகி பெவிலியன் திரும்பியபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டினர். இந்தப் போட்டியில் மட்டுமல்ல இந்தாண்டிலேயே டெஸ்ட், ஒருநாள், டி-20 என்று மூன்று தரப்பு கிரிக்கெட்டிலும் கில் நம்பிக்கை நாயாகனாக வளர்ந்துள்ளார். இந்தாண்டு தற்போதுவரை மூன்று தரப்பு கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக டெஸ்ட் (128), ஒருநாள் (208), டி-20 (126) ஒரு வீரரின் அதிகபட்ச ஸ்கோர் எடுத்திருப்பது கில் தான். தற்போதுவரை கில் இந்தாண்டு ஒருநாள் கிரிக்கெட்டில் ஒரு இரட்டை சதம், இரண்டு சதம், டெஸ்ட் மற்றும் டி-20 போட்டியில் தலா ஒரு சதம் அடித்திருக்கிறார்.
-ம.பவித்ரா









